பத்மாவத், அந்தாதுன், பாக் மில்கா பாக் போன்ற மிகப்பெரிய மற்றும் கதையம்சம் கொண்ட படங்கள் மூலம் இந்திய சினிமாவை மறுவரையறை செய்த இந்தியாவின் பிரீமியர் கண்டெண்ட் ஸ்டுடியோ வையாகாம் 18 ஸ்டுடியோஸ், தேவதாசா (தெலுங்கு) மற்றும் கோடத்தி சமக்ஷம் பாலன் வகீல் (மலையாளம்) ஆகிய சினிமாக்கள் மூலம் பிராந்திய மொழி சினிமாவில் அடியெடுத்து வைத்தது. இப்போது வையாகாம் 18 மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மூலம் தமிழ் சினிமாவில் தங்களின் வருகையை அறிவிக்கிறது.
வையாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது, “ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளை தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்திகரமான எதுவும் இல்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கப்படும் கதைகளை கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோசஃப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற பல விஷயங்களை எதிர்நோக்குங்கள்” என்றார்.
தயாரிப்பாளர், ஆண்டோ ஜோசஃப் கூறும்போது, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” போன்ற ஒரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இது வையாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம் மற்றும் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரிகிறேன். இந்த படத்திற்கு இதை விட ஒரு சிறந்த கூட்டணி கிடையாது” என்றார்.
இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது, “எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வையாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம். இந்த திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் பிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வையாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்த படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.
இது குறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்காக வையாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் நடித்துள்ளனர்.