spot_img
HomeNewsவெளிநாடுகளிலும் “தும்பா வரவேற்பை பெற்றது

வெளிநாடுகளிலும் “தும்பா வரவேற்பை பெற்றது

தும்பா’  
 
சில சந்தோஷங்கள் விவரிக்க முடியாதவை, அவற்றை வார்த்தைகளில் வரையறுக்க முடியாது. அப்படி ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான் தும்பா படக்குழுவுக்கு நிகழ்ந்திருக்கிறது. வணிகரீதியான வெற்றி மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்றது மட்டுமல்லாமல், பார்வையாளர்களிடமிருந்தும், குறிப்பாக குழந்தைகளிடமிருந்தும் பெரும் பாராட்டுக்களை ‘தும்பா’ பெற்றதே இதற்கு காரணம்.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, “தும்பாவுக்கான அருமையான வரவேற்பை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது சென்னையில் மட்டுமல்லாமல், மற்ற நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை எங்களுக்கு ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை எழுதும்போதும், தயாரிக்கும் போதும், தும்பா ‘குழந்தைகளுக்கான படம்’ என்பதை மனதில் வைத்தே இயங்கினோம். இருப்பினும், எங்கள் அனுமானங்களை தாண்டி, பெரியவர்கள் கூட திரைப்படத்தை ரசிப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். இதுபோன்ற சிறந்த வரவேற்பு, நல்ல படங்களை தொடர்ந்து தயாரிக்கவும், வழங்கவும் எங்களை தூண்டுகிறது” என்றார்.

தயாரிப்பாளர், சுரேகா நியாபதி, அவர்களின் அடுத்த படத்தை பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறும்போது, “நாங்கள் விரைவில் எங்கள் புதிய படத்தை தொடங்க உள்ளோம், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம்” என்றார்.

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்காக இந்த திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை நடத்தியதில் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறது. இது குறித்து சுரேகா கூறும்போது, “படத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் குழந்தைகள் மிகவும் ரசித்ததால், ஒட்டுமொத்த குழுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். எங்கள் படம் அவர்களை மகிழ்விப்பதை பார்த்தபோது மிகவும் உணர்ச்சிவசமாக இருந்தது. அதை ஒரு விலைமதிப்பற்ற தருணமாக நாங்கள் கருதுகிறோம்” என்றார்.

ஜூன் 21, 2019 அன்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸால் உலகளவில் வெளியிடப்பட்ட இந்த தும்பா திரைப்படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனா ஆகியோருடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த “புலி தும்பா” முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. அனிருத், விவேக் – மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோரின் இசை படத்தை அலங்கரித்திருந்தது. நரேஷ் இளன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்திருந்தார்.

ஹரிஷ் ராம் எல்.எச் இயக்கிய இந்த சாகச நகைச்சுவை குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை ரீகல் ரீல்ஸ் (ஓ.பி.சி) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி. உடன் இணைந்து தயாரித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img