spot_img
HomeNewsகலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ்

கலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார்.  தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘100 காதல்’ ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருக்கிறார். மேலும், ‘நானே என்னுள் இல்லை’ படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

‘புதிய ராகம்’ என்ற படத்திற்கு தானே வசனம் எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார்.

நல்ல பிள்ளைகள் அமைவது வரம். அது நடிகை ஜெயசித்ராவுக்கு அமைந்திருக்கிறது. 2010-ம் ஆண்டு ‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அம்ரீஷ். அதனைத் தொடர்ந்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’, ‘சத்ரு’ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது, ‘கர்ஜனை’, ‘யங் மங் சங்’, ‘வீரமாதேவி’, ‘பரமபத விளையாட்டு’, ‘கா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளுக்கு அவரது மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ் திரையுலக நட்சத்திரங்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாகக் கொண்டாடி அம்மா ஜெயசித்ராவை ஆச்சரியப்படுத்தினார். விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:-

நடிகர் சிவகுமார் பேசும்போது:-

என்னுடன் நடித்த மிக வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். ‘சொல்லத் தான் நினைக்கிறேன்’ மறக்கமுடியாத படம். அதேபோல், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படமும் மறக்க முடியாத படம். பாம்பை ஜெயசித்ராவின் அருகில் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்தக் காட்சிகளை சவாலாக செய்து முடித்தார் ஜெயசித்ரா. சினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன்.

நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. ஆனால், ஜெயசித்ராவுக்கும், அவரது மகன் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கும், 16 செல்வங்களும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது:-

என்னைப் பொருத்தவரையில் அன்று ‘தண்ணி கருத்துருச்சி தவள சத்தம் கேட்டிருச்சி’ பாட்டில் பார்த்த அதே ஜெயசித்ராவாகத்தான் இன்றும் பார்க்கிறேன். அவருடைய முக வசீகரம் 1 சதவீதம் கூட மாறாமல் இன்றளவும் மாறாமல் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் அவருடைய மனம் தான்.

பாசம்கொண்ட பிள்ளைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இதற்கு முன் வாழ்த்திச் சென்ற நடிகர் சிவாகுமாருக்கு அருமையான இரண்டு பிள்ளைகள் வாய்த்திருக்கிறார்கள். அதேபோல், ஜெயசித்ராவுக்கும் அதிக அன்பு மிகுந்த மகன் கிடைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் ஜெயசித்ரா கதாநாயகி தான். அவர் வாழ்க்கையில் அவரது மகன் அம்ரீஷ் கொண்டாடும் பிறந்த நாள் விழா தான் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். இன்று போல் என்றைக்கும் அம்மாவை இதே அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் அம்ரீஷுக்கு கோரிக்கை வைத்தார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

நடிகை ஜெயசித்ரா பேசும்போது:-

என் பிறந்த நாளை என் மகன் அம்ரீஷ் வெகு விமரிசையாகக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நான் வெளியூர் படப்பிடிப்பிற்கு செல்லும் போது அவனை விட்டு செல்வதில் மிகுந்த மனவேதனை அடைவேன். என்னுடைய ஏக்கம் வராமல் இருக்க அவ்வப்போது தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். இதன்மூலம் அவனருகில் நான் இருப்பதாக எண்ணத்தை அவனுக்குக் கொடுப்பேன். படபிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது அவனுக்கு பிடித்த பொம்மைகளை வாங்கி வருவேன். ஒருமுறை அமெரிக்கா செல்லும் சமயத்தில் என் கணவர் பிள்ளையை அழைத்துச் சென்றால் படப்பிடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது என்று அனுப்ப மறுத்துவிட்டார். விமானத்தில் நீண்ட நேரம் அவனது நினைவு நீங்கவே இல்லை. பிறகு இந்தியா திரும்பும்போது அவனுக்கு பிடித்த பெரிய கார் பொம்மையை வாங்கி வந்தேன். இதுவரை அவனை நான் திட்டியதோ, அடித்ததோ கிடையாது. எத்தனையோ பிறந்த நாள் இதற்கு முன் கொண்டாடியிருந்தாலும் இந்த பிறந்த நாளை என்னால் மறக்கமுடியாது. எனது பிறந்த நாளைக்கு மறக்க முடியாத பரிசை என் மகன் எனக்கு கொடுத்திருக்கிறான் என்று நெகிழ்த்ததோடு அல்லாமல், எனது பிறந்தநாள் விழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.

நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாள் விழாவில், ஆர்.வி.உதயகுமார், நடிகர் சிவகுமார், சௌகார் ஜானகி, சினேகன், நமீதா மற்றும் அவரது கணவர், இயக்குநர் சாய்ராம், லக்ஷ்மன் ஸ்ருதி, நேக் ஸ்டுடியோவின் கல்யாண், பாடகர் சிவா போன்ற திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img