பெரியவர் முதல் சிறியவர் வரை எக்காலத்திலும் அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடியது காதல் கதைகள் தான். இது பலமுறை காலத்தால் நிரூபிக்கபட்டது. தற்போது இயக்குநர் சிபி உஸ்ஸேன் மீண்டும் இக்காலத்திற்கேற்ற இளைஞர் மனதை கொள்ளை கொள்ளும் காதல் கதையோடு வந்திருக்கிறார்.”147” என்கிற தலைப்பில் உருவாகும் இந்த ரொமான்டிக் டிராமாவை AJ Fiilms நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தினை பற்றி இயக்குநர் சிபி உசேன் கூறியது…
மௌனப்படக் காலம் , கருப்பு வெள்ளை காலம், தொழில் நுட்பத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற இந்தக்காலம் என எக்காலத்திலும் மங்கிபோகாத கதை தான் காதல். காதல் கதைகளும் அதன் உணர்வுகளும் எப்போதும் அழியாதது. மீண்டும் மீண்டும் எத்தனை முறை சொல்லப்பட்டாலும் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் தன்மை கொண்டவை தான் காதல் கதைகள். அதிலும் முதல் காதலை சொல்லும் கதைகளை அனைவரும் தங்கள் வாழ்வோடு பிணைத்து நினைவுகளோடு சேர்த்து பிணைத்து உருகும் தன்மையுடையவை. இத்தகைய காதலை நினைவு படுத்தும் கதைதான் 147
15 வருட நீண்ட பிரிவுக்குப் பின் ஒரு பயணத்தில் மகின், நந்தினி இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். அவர்களுடன் வேறொரு தம்பதியும் பயணம் செய்கிறார்கள். அந்தப் பயணத்தில் தங்கள் மனதில் நீங்காமல் இருக்கும் தங்களின் கடந்த கால நினைவுகளை, அழியாத சம்பவங்களை தம்பதிகளின் வழி மீட்டெடுக்கிறார்கள் மகினும் நந்தினியும். கூடவே பயணிக்கும் அந்த தம்பதி மகினுக்கும், நந்தினிக்கும் அவர்கள் தொலைத்த காதலையும் தியாகத்தையும் ஞாபகப்படுத்துகிறார்கள். அந்த தம்பதிக்கு மகின் தன் காதல் கதையை, தன் பார்வையில் சொல்கிறான். தம்பதிக்கு கதை முழுதாக சொல்லப்பட்டதா அல்லது இன்னும் இருக்கிறதா?, இந்தப் பயணமே முதலில் ஏதேச்சையானது தானா? இந்தக் கேள்விகளுக்கு நிறைய திருப்பங்களுடனும் மனதை தாக்கும் உணர்வுகளுடனும் பிரிந்த காதலின் ஆத்மாக்களை ஓர் மிகப்பெரும் அனுபவத்தை அந்தப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் படம் பார்க்கும் நமக்கும் உணர்த்தும் கதை தான் 147.
இத்தனை உணர்வுமிக்க ஒரு கதைக்கு எதற்காக 147 எனும் தலைப்பு என்ற கேள்விக்கு மெல்லிய புன்னகையுடன் இயக்குநர் சிபி உசேன் …
அது ரகசியம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும். இப்படியான ஒரு காதலை 147 என்கிற மூன்று எண்கள் எப்படி ஒன்றிணைக்கப் போகிறது என்பதை படம் பார்க்கும் அந்தத் தருணத்தில் உணர்வார்கள் அதுவரை அது ரகசியமே என்றார்.