spot_img
HomeNews‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் நடித்தது குறித்து பிரியா மணி...

‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் நடித்தது குறித்து பிரியா மணி பேட்டி

சினிமா படப்பிடிப்புக்கும், வெப் சீரிஸ் படப்பிடிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது – பிரியா மணி

கதையை கேட்டவுடன் சுசித்ரா கதாபாத்திரத்தில் இறங்கிவிட்டேன் – ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் குறித்து பிரியா மணி

மறைந்த பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா என்ற ஜாம்பவான் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா மணி, தொடர்ந்து பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட ஜாம்பவான்களின் படங்களில் நடித்ததோடு, அமீரின் ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். நடிகைகள் பலர் இருந்தாலும், நடிக்க கூடிய நடிகைகள் என்று கேட்டால், டக்கென்று நினைவுக்கு வரும் நடிகைகளில் பிரியா மணி முக்கியமானவராக இருக்கிறார். தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய பிரியா மணி, தற்போது இணைய தொடர் உலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தற்போது இந்திய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படும் இணைய தொடர்களில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில், ‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) என்ற வெப் சீரிஸ் மூலம் பிரியா மணி இணைய தொடரில் அறிமுகமாகிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி இதோ,

திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நீங்கள் வெப் சீரிஸில் நடிக்க சம்மதித்தது ஏன்?

ஒரு வலைத்தொடரில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது நான் உணர்ந்த முதல் மற்றும் முக்கிய விஷயம், எந்த இரண்டாவது எண்ணங்களும் இல்லாமல் அதற்காக செல்ல வேண்டும் என்பது தான். அனைத்து துறையில் உள்ள நடிகர்களும் வலைத்தொடரில் நடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக பாலிவுட்டில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களும் வலைத்தொடரில் நடிக்கும் போது, நா. ஏன் நடிக்க கூடாது?. என்னிடம் முதல் முறையாக இயக்குநர் ராஜ் மற்றும் டி.கே கதை சொல்லும் போதே, நான் சுசித்ரா கதாபாத்திரத்தில் இறங்கிவிட்டேன். என்னுடைய கதாபாத்திரம் மட்டும் அல்ல, ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

உங்களுடன் நடித்த பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பயி பற்றி…?

மனோஜ் பாஜ்பயி சார் கதையின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உளவுத்துறையில் பணியாற்றும் அவர், தனது நடுத்தர குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துவதற்காக பாடுபடுவார். சமகால சமுதாயத்தின் பணிபுரியும் பெண்களை பிரதிபலிக்கும் சுசித்ரா, வேலை மற்றும் குடும்பம் இரண்டிற்கும் சமமான இடத்தை கொடுக்க வேண்டும் என்று நினைப்பதோடு, ஸ்ரீகாந்த் தனது வேலையில் முழுமையான கவனம் செலுத்துவதாகவும், குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததாகவும் அவர் உணருவது இருவருக்கும் இடையிலான முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும், சந்தோஷமாக இருக்கும் இந்த குடும்பத்திற்கு இரு முனைகளில் இருந்தும் அழுத்தங்கள் வருகின்றன. அதையும் தாண்டி இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக நேசிக்கிறார்கள். இப்படி அழகான குடும்ப கதையோடு நகரும் இந்த வெப் சீரிஸில் பல திருப்பங்களும் நிறைந்திருக்கின்றன.

சினிமாவுக்கு, வெப் சீரிஸுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

திரைப்பட படப்பிடிப்புக்கும், வெப் சீரிஸ் படப்பிடிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒரு நாளில் ஐந்து முதல் ஆறு காட்சிகளை படமாக்கி முடித்துவிடுகிறார்கள். இது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்துடன், ’தி ஃபேமிலி மேன் சீசன் 2’ வுக்கான படப்பிடிப்பையும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.

அமேசானில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸில் இந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான மலையாள நடிகர் நீரஜ் மாதவ், பாலிவுட்டின் சென்சேஷனல் நடிகர் குனால் பகத் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img