நடிகர் அருண் விஜய் அவர்களின் திரைவாழ்க்கை என்பது வெற்றிக் கனிகளும், காயங்களும் இரண்டறக் கலந்ததுதான். திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது ஏற்படும் காயங்களை, வெற்றிப் படிகளில் ஏறக்கிடைக்கும் வாய்ப்பாக அவர் தன்னுள் அடைகாத்துக்கொள்கிறார் என்பதுதான் நிதர்சனம்.
ஜி,என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் புதிய படமொன்றின் சண்டைக்காட்சியில் மீண்டும் ஒரு விழுப்புண் அவர் உடலில் ஏறியிருக்கிறது. ஆம். சண்டைக்காட்சியில் மீண்டும் காயமடைந்திருக்கிறார் அருண் விஜய்.
இது குறித்து புன்னகையுடன் அருண் விஜய் கூறியதாவது…
“எதிர்பாராத முறையில் ஏற்பட்ட இந்தக் காயம், நடிகர் என்ற முறையில் என் திரைவாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். கண்ணாடி பாட்டில் ஒன்றை நான் உடைப்பது போன்ற காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா அமைத்திருந்தார்.
சுகர் கிளாஸ் எனப்படும் ஒருவகைக் கண்ணாடியைத்தான் சண்டைக்காட்சிகளில் பயன்படுத்துவது வழக்கம். இந்தக் கண்ணாடி கடினமாக இருந்தாலும், எதிர்பாராமல் தவறு நேரும்போதுகூட உடலுக்கு ஊறு விளைவிக்காது. குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கண்ணாடியை பயன்படுத்துவதற்கு முப்பது நிமிடங்கள் முன்புதான் வெளியே எடுக்க வேண்டும். காட்சியை படமாக்க சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தக் கண்ணாடி எதிர்பாராதவிதமாக என் முன்னங்கையில் காயத்தை ஏற்படுத்திவிட்டது. கையிலிருந்து ரத்தம் சொட்ட ஆரம்பத்த பிறகுதான் காயத்தையே நான் கவனித்தேன். உடனடியாக வந்து ஸ்டண்ட் சில்வா எனக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்தார்” என்றார் அருண் விஜய்.
அருண் விஜய் 30 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் அருண் விஜய். ஏற்கெனவே குற்றம் 23 படத்தில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக வந்த அருண் விஜய்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூவி ஸ்லைட்ஸ் பி.லிட் சார்பில் உருவாகும் இந்தப் படத்தை ‘ஹரிதாஸ்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார். ‘சகா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஷபீர் இசையமைக்க, தடம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கோபி ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்