ஜெய் ஸ்ரீ ராம் கிரியேஷன்ஸ் சார்பில் லிங்கா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தியம்’.
இப்படத்தில் ஹீரோயினாக அக்ஷதா நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தனசேகர்
ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் செ.காளிமுத்து, சரண்யா,
ஜோகி பி.சரண், மறைந்த அண்ணாமலை ஆகியோர் பாடல்கல் எழுதியிருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர்
ஜாக்குவார் தங்கம், டாக்டர் ரவி கே.விஷ்ணு பிரசாத், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி, சக்தி டிரான்ஸ்போர்ட்ஸ்
நிறுவன உரிமையாளர் அருள், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக
கலந்துக் கொண்டனர். ரவி கே.விஷ்ணு பிரசாத் பாடல்கள் குறுந்தகடை வெளியிட, சினேகன் உள்ளிட்ட சிறப்பு
விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஹீரோ, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்கா, “’காந்தியம்’ என்ற இந்த
திரைப்படம் உங்களுடைய பார்வைக்கு மிக வித்தியாசமாக இருக்கும். ஒரு கிராமத்தை எப்படி நகரமாக
மாற்றுகிறார்கள் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். நமது வாழ்க்கை தரம் ஏன் இப்படி இருக்கிறது,
நாம் ஏன் இப்படி இருக்கிறோம், என்பதை விவரிக்கும் இப்படம் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த
முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்.
கோவையில் உள்ள பி.கே.ராமராஜ் வாணவராயர் ஜமீன் கோட்டையில் தான் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும்
நடத்தியிருக்கிறோம். இப்படம் சாமாணிய மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
நாகரீகமானவர்களுக்கும், நாகரீகத்தை இன்னும் அறியாமல் இருப்பவர்களும் பிடித்தமான ஒரு படமாகவும் இப்படம்
இருக்கும்.
இந்த படத்தில் மறைந்த அண்ணாமலை எழுதிய அம்மா பாடல் அனைவரையும் கவரும். குழந்தைகளுக்கு பிடித்தமான
ஒரு பாடலாகவும் இருக்கும். இப்பாடல் மட்டும் இன்றி மற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.
சினேகன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முக்கிய காரணம் பாடலாசிரியர் காளிமுத்து. நான் பல காவல்
துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் தமிழ் பற்று அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், எப்படி தான்
அவர்களால் அப்படி இருக்க முடிகிறது என்று கூட நான் யோசித்திருக்கிறேன். ஒரு பக்கம் காவல் பணி, மறுபக்கம்
தமிழை காக்கும் பணி என்று பேலன்ஸ் செய்வார்கள். அவர்களைப்போன்ற ஒரு காவல் துறை அதிகாரி தான்
காளிமுத்து. அவர் எழுதிய கவிதை புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். தற்போது அவர் பாடலாசிரியாக
அறிமுகமாகியிருக்கும் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘காந்தியம்’ என்ற தலைப்பே ஈர்க்கிறது. அகிம்சை என்ற ஒன்றை உலகிற்கு கற்றுக்கொடுத்த காந்தி பிறந்தநாளான
இன்று (அக்.2) இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது சிறப்பானதாகும். இந்த படம் ஆக்ஷன் படம்
என்று சொன்னார்கள். காந்தியம் என்ற தலைப்பு வைத்துவிட்டு ஆக்ஷன் இருக்கிறது என்றால், அதற்கு நிச்சயம் பெரிய
காரணம் இருக்கும், அது சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால் சிறிய
படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ‘காந்தியம்’ நிச்சயம் வெற்றி பெறும் என்று நான்
நம்புகிறேன்.” என்றார்.
நிகழ்ச்சியில் ஒபிஆர் சங்க தலைவர் விஜய முரளி, ஜாக்குவார் தங்கம், ரவி கே.விஷ்ணு பிரசாத், அருள் அனைவரும்
பேசினார்கள்.