முதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா*
*சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை : நடிகை ரியா*
ஒரு ஹாரர் படமாக உருவாகி இருக்கிறது ‘மேகி’ என்கிற மரகதவல்லி . இப்படத்தில் கதாநாயகியாக பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா .அவர் ‘ மேகி’ படத்தின் அனுபவங்களைக் கூறுகிறார்.
” எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா என்றால் மிகவும் இஷ்டம். நிறைய படங்கள் பார்ப்பேன் . சிறு வயதிலேயே மாடலிங் சினிமா என்று தோன்றி நடிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு .ப்ளஸ் டூ முடித்த பின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன் .அவர் இதற்கு உடன்படவில்லை. எப்படியாவது என்னைத் திசை மாற்ற வேண்டுமென்று “நீ ஒரு டிகிரி முடித்து விட்டு வா. அப்புறம் பார்க்கலாம்” என்றார் .அதன்படி நான் பி.எஸ்.சி முடித்து மீண்டும் இதைக் கேட்ட போது “இன்னொரு மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு வா “என்றார் .ஆனால் நான் விடவில்லை. “படித்துக்கொண்டே நடிக்கிறேன் பரவாயில்லை” என்று கூறினேன்.
நான் சினிமாவில் ஒரு பக்கம் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன் .ஒருபக்கம் படித்துக்கொண்டிருந்தேன்.அப்படி நான் இயக்குநர் கார்த்திகேயன் சாரைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “நீங்கள் தமிழ்ப் பெண்ணா ?”என்றார் .ஒரு கணம் நான் யோசித்தேன் .ஏன் என்றால் நான் வாய்ப்பு கேட்டுப் போன போதெல்லாம் தமிழ் பெண் என்பதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .இப்படி வாய்ப்பு தேடி போகிற இடங்களில் நான் தமிழ்ப் பெண் என்றவுடன் வாய்ப்பு தரமுடியாது என்று சொல்லிவிடுவார்கள். இவரும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டார்.
இருந்தாலும் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று “நான் தமிழ்ப் பெண் தான் ” என்றேன் .அவர் சிரித்தார் .”தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பெண்ணைத்தான் என் படத்திற்கு தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. சினிமாவில் தமிழ்ப்பெண் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை .எப்படி இது என்று ஆச்சரியமாக இருந்தது. இரண்டு நாளில் மீண்டும் அழைத்து ‘மேகி’ படத்தின் கதையைக் கூறினார்.
இது ஒரு ஹாரர் படம் . என் பாத்திரத்தைப் பற்றிக் கூறியபோது எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியம், இன்னொரு பக்கம் மகிழ்ச்சி .ஏன் என்றால் அதில் நான் பேயாக வருகிறேன் .இப்படி நான் படத்தின் பிரதான பாத்திரமாக இருப்பதில் மகிழ்ச்சி. பிறகு மளமளவென படப்பிடிப்பு தொடங்கியது .கொடைக்கானல் சென்றோம். அங்கே 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .பேயாக நடிப்பது என்றவுடன் கோரமாக ஒப்பனை எல்லாம் செய்து கொள்ளவில்லை. நான் நானாகவே வருவேன். ஆனாலும் பயமுறுத்தும்படி அப்படிக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
படப்பிடிப்பு நாட்கள்
என்னால் மறக்க முடியாதவை. படத்தில் வருபவர்கள் பெரும்பாலும் எல்லோருமே புதுமுகங்கள்.சிலர் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் எனக்கு கேமரா முன் எப்படி நிற்க வேண்டும் கேமராவை எப்படி பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள் மிகவும் உதவியாக இருந்தது.
இயக்குநர் கார்த்திகேயன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினார்.
அவரே தயாரிப்பாளராக இருந்ததால் அனாவசியமான செலவுகள் தவிர்க்கப்பட்டன .படக்குழுவினர் சுதந்திரமாக இருக்க வைத்தார்கள்.
அனைவரும் நட்புடனும் பழகினர். கல்லூரிக்கு சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியதுஎனக்கு. நல்லதொரு நடிப்பு வாய்ப்பாகவும் அந்தப் பட அனுபவம் இருந்தது. அது மட்டுமல்ல தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் அப்போது தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்கிற தெளிவையும் கொடுத்தது.
இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை நான் கனவு கண்ட சினிமாவில் நானும் ஒரு வாய்ப்பு பெற்று அதுவும் ஒரு படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறேன் என்று நினைத்தால் நம்ப முடியவில்லை.
வருகிற 22ஆம் தேதி படம் வெளியாகிறது படபடக்கும் இதயத்தோடு படத்தை காண காத்திருக்கிறேன் “இவ்வாறு ரியா கூறினார்.