spot_img
HomeNewsதேசீய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்

தேசீய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்

விருதுகளைக் குவித்த இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் தேசீய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ திரைப்படம்

‘ஆடுகளம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ படத்தை வெளியிடுகிறது.
இரண்டு முறை தேசிய விருதை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது….
கிராப்புறங்களில் உள்ள தலைக்கூத்தல் என்ற உறுதியான நம்பிக்கையை பற்றி பேசும் படம்தான் ‘பாரம்’. உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கிய இந்தக் கதை பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதை படமாக்க ஆரம்பித்தோம்.

இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருது ‘பாரம்’ படத்துக்கு கிடைத்திருப்பதால், மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் கனவு எளிதில் நிறைவேறும். இதற்ககாக நான் தேர்வுக் குழுவினருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அனைத்து வகையான படங்களையும், அவற்றை சொல்லக்கூடிய முறைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் மிக்கவர்களாக இருப்பதால், நான் தமிழ்ப்பட ரசிகர்களை பெரிதும் மதிக்கிறேன். எந்த வகைப் படமாக இருந்தாலும் சரி, அதில் நல்ல கதை இருக்கிறதா என்று மட்டும் பார்க்கக்கூடிய தமிழ் ரசிகர்கள் எந்த இயக்குநருக்கும்  உகந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

வெற்றி மாறனுடன் நடந்த முதல் சந்திப்பிலேயே அவர் ‘பாரம்’ படத்தை வெளியட முன்வந்தபோது ஒரு கனவு நனவானதைப்போல்தான் இருந்தது. ஏனென்றால் வெற்றி மாறனை நான் பல ஆண்டுகளாக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பலமான கதைகள், பளீர் வசனங்கள், நேர்த்தியான திரைக்கதை, அற்புதமான நடிப்பு என்று பயணிக்கும் வெற்றி மாறனின் படங்கள் என் ரசனைக்கேற்ற படைப்புகளாகும். சர்வதேச உணர்வுகளுக்கு ஈடுகொடுப்பது வெற்றி மாறன் படங்கள் என்பது என் கருத்து.

வெற்றி மாறனின் ஆதரவு, அவர் கொடுத்த ஊக்கம்,  அவரது அறிவு மற்றும் ஆற்றலை எங்களுடன் தாராளமாக பகிர்ந்துகொண்ட விதம் ஆகியவற்றுக்காக நாங்கள் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பினும் அவரது தொலை நோக்குப் பார்வையில் ‘பாரம்’ திரையரங்க வெளியீடு எங்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி பேசும் ‘பாரம்’ படத்தில் நடித்திருக்கும் 85க்கும் மேற்பட்டவர்களில் பலரும்  இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும் காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து ‘பாரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். தேசிய விருது வழங்கப்படத் துவக்கியதிலிருந்து, கடந்த 65ஆண்டுகளில் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுகிறார் பிரியா கிருஷ்ணசாமி.

இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத்.

‘பாரம்’ திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் விநியோகிக்கிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழகம் முழுவதும் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img