சொன்னதை செய்த மிஷ்கின் பிரமிப்பில் ஆழ்ந்த திரையுலகம். சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தரமிக்க படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது முதல் ஆளாக நேசிக்கவும் பாராட்டவும் தவறுவதில்லை. “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “பாரம்” படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் எனக்கூறியபடியே அவர் தற்போது செய்து காட்டியுள்ளார். சினிமா மீதான அவரது அளவற்ற நேசிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய விருதை வென்ற “பாரம்” திரைப்படம் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்குநர் மிஷ்கினின் அளவிலா அன்பின் செயலால் மிகுந்த புளகாங்கிதம் அடைந்துள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறியதாவது…
“பாரம்” படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பே கிடையாது.அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது. இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. “பாரம்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது அவர் பேசியதிலிருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது. தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. இந்த அன்பு எங்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.
இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் ஆர்த்ரா ஸ்வரூப் மற்றும் ப்ரியா கிருஷ்ணசுவாமி இணைந்து Reckless Roses நிறுவனத்திற்காக தயாரித்திருக்கும் “பாரம்” திரைப்படம் தமிழகமெங்கும் ரசிகர்களிடம் நல்ல படம் என்கிற பெயர் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.