spot_img
HomeNewsஅனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்துவரக்கூடிய திரைப்படமாக திரௌபதி இடம்பெற்றுள்ளது. 

அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்துவரக்கூடிய திரைப்படமாக திரௌபதி இடம்பெற்றுள்ளது. 

#திரளெபதி
தமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் இரண்டு படங்கள் முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று வெளிவரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்துவரக்கூடிய திரைப்படமாக திரௌபதி இடம்பெற்றுள்ளது.  இயக்குனர் மோகன்.G தயாரித்து இயக்கியிருக்கும் குறைந்த பட்ஜெட் படம் திரெளபதி. இந்தப்படத்தின் முதல் டிரெய்லர் “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்கிற அடைமொழியோடு வெளியானபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சிக்குள்ளானது.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் பரபரப்பை பின்னுக்குத்தள்ளி அனைத்து சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் விவாத பொருளாக முதலிடத்தை ஒரு வார காலம் ஒன்றரை கோடியில் தயாரான திரெளபதி ஆக்கிரமித்து தக்கவைத்துக்கொண்டது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. படம் எந்த மாதிரியான கருத்தை முன்வைத்தது தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இயக்குநரை தவிர்த்து வேற யாருக்கும் தெரியாது. இருந்தபோதிலும் சினிமாவை கடுமையாக எதிர்த்து வரும் பாமக ராமதாஸ் இந்தப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறேன் என கருத்து தெரிவித்தது தமிழக அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது
டிரெய்லர் வெளியான வேகத்திலேயே இந்தபடத்திற்கு எதிராக கண்டன குரல்கள் புகார் மனுக்கள் மத்திய, மாநில அரசுகளிடம் குவியத் தொடங்கியது.
கருத்துரிமைக்காக போராடும் கொள்கை கொண்ட சமூக ஆர்வலர்கள் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பொதுவெளியில் விவாதிக்க தொடங்கினார்கள். சிறு சர்ச்சை ஏற்பட்டாலே அந்தப் படத்தை வியாபார ரீதியாக அணுகுவதற்கு வினியோகஸ்தர்கள் விரும்பமாட்டார்கள். “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்ற அடைமொழியோடு வெளியான டிரெய்லர் வெளியாகி, அது ஏற்படுத்திய அதிர்வுகளை கணக்கில் கொண்டு இந்தப் படத்தின் தமிழக உரிமையை படம் பார்க்காமலேயே சுமார் ஒரு கோடிக்கும் அதிகமாக பிரபல திரைப்பட வினியோகஸ்தர் சேலம் 7G சிவா வாங்கினார்.
“இந்தப் படத்தை வாங்குவதற்கு சமூக அமைப்புகள், தனிநபர்கள் என்ன விலை என்றாலும் அல்லது வெளியிடுவதற்கு எவ்வளவு செலவானாலும் முதலீடு செய்வதற்குத் தயாராக இருந்தார்கள். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தொழில் ரீதியாக சினிமாவை நேசிப்பவர்கள் அதனைத் தொழிலாக செய்ய விரும்பக்கூடிய நிறுவனங்களுக்கு மட்டுமே “திரெளபதி”படத்தை வியாபாரம் செய்வது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால்தான் மூன்று கோடி ரூபாய் வேண்டாம் என்று மறுத்துவிட்டு அதற்கு குறைவாக இந்தப்படத்தின் தமிழக உரிமையை கொடுப்பதற்கு நான் விரும்பினேன்” என்கிறார் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான மோகன்
ஜனவரி 26, இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கி இருப்பதை அதிகாரப்பூர்வமாக 7G சிவா அறிவித்த 48 மணி நேரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து ஏரியா உரிமைகளும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் முடிந்துள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களின் வியாபாரம் மினிமம் கேரண்டியில் முடிவதற்கு இன்றைய சூழலில் போராட்டக் களமாக மாறியிருக்கும் நிலையில் சினிமாவில் வெற்றிபெற்ற எந்தவொரு நடிகரும் நடித்திராத “திரௌபதி” படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில் தமிழ் சினிமாவின் முன்னணி விநியோகஸ்தர்கள் செங்கல்பட்டு காளியப்பன் கோவை கந்தசாமி சினி ஆர்ட்ஸ் ராஜமன்னார், நெல்லை மணிகண்டன் ஆகியோர்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 28 அன்று படம்ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுபோன்ற குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது தமிழ் சினிமாவில் குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. பிப்ரவரி 28 திரிஷா நடித்துள்ள பரமபதம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,கடலில் கட்டுமரம், கல்தா, இரும்பு மனிதன் ஆகிய படங்கள் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் திரையரங்குகள் தரப்பில் முதல் வாய்ப்பு திரெளபதி படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரை எழுதப்படும் நேரம் வரை தமிழகத்தில் இந்தப்படம் 300 திரையரங்குகளில் திரையிடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது 375 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் திரையிடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விஜய், அஜித் படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் முதலாளிகள் தரப்பில் ஆர்வம் இருக்கும். அதேபோன்ற விருப்பம் “திரெளபதி” படத்தை திரையிட இருக்கிறது என்கிறார் செங்கல்பட்டு ஏரியா உரிமையை வாங்கியுள்ள காளியப்பன். ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விக்ரம் அவர்கள் நடித்து வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள், மன்றத்தினர் போஸ்டர் பேனர்கள் வைப்பது இயல்பானது. ஆனால் “திரெளபதி” படத்தில் பிரபலமான கதாநாயகன் நடிக்கவில்லை. சினிமாவில் காணாமல் போன ரிச்சர்ட் இப்படத்தின் கதாநாயகனாக இருக்கும்போதும் இந்தப்படத்திற்கு தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் பேனர்கள் தினந்தோறும் தன்னிச்சையாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. திரையரங்குகள் தரப்பில் சிறப்புக் காட்சி திரையிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குடும்பங்களுடன் படம் பார்க்க முன்பதிவு டிக்கெட்டுகள் டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 இந்தப்படம் பணத்துக்காக நடத்தப்படும் நாடகத் திருமணம், ஆணவ கொலைகள் இவற்றை மையப்படுத்தி திரைக்கதை உள்ளதாக கூறப்படுகிறது
இதுபற்றி இயக்குநர் தரப்பில் கேட்டபோது “இந்த படத்தை பொதுவெளியில் வியாபார முக்கியத்துவம் உள்ள படமாக மாற்றுவதற்கு காரணமாக அமைந்தது பாரதியாரின் புகழ் பெற்ற “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்கிற வரிகளை எதிர்மறையாக பயன்படுத்தியதுதான்” என்கிறார். “பாரதியாரின் கருத்துக்களுக்கு கொள்கைகளுக்கு எதிரானவன் நான் இல்லை” என்றும் கூறுகிறார். “அதே போன்று இந்தபடத்தில் என்ன சொல்ல வருகிறேன் என்பதே தெரியாமல் ஆதரவு எதிர்ப்பு இரண்டும் சம பலத்தில் உருவானது. இவையெல்லாம் இந்தப்படத்தின் மீது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் கொண்டுவர காரணமாகியிருக்கிறது. நான் ஒரு இயக்குநராக சமூக அக்கறையோடு இந்தப்படத்தில் எனது கருத்தை முன் வைத்திருக்கிறேன். எந்த ஒரு சிறுபான்மை ஜாதிக்கு எதிராகவும் அல்லது பெரும்பான்மை ஜாதிக்கு ஆதரவாகவும் கருத்து சொல்லவில்லை; காட்சி வைக்கவில்லை. சமகால தமிழகத்தில் திருமண வயதை எட்டிப் பிடிக்கும் ஆண், பெண் இரு தரப்பினரும் நேர்மையான புரிதல் இல்லாமல் செய்யும் செயல்களால் அவர்களது பெற்றோர்கள் சந்திக்கும் அவமானங்கள், சங்கடங்கள் இவற்றை இந்தப் படத்தில் பேசியிருக்கிறேன். சட்டத்துக்குப் புறம்பான செயல்களை சட்டத்தின் துணையோடு அரங்கேற்றி பணம் சம்பாதிப்பதை சமரசமின்றி பதிவு செய்திருக்கிறேன். அதனால்தான் நெருப்பில் உருவான, அநீதிக்கு எதிராக ஆண்கள் துணையோடு மகாபாரதப் போரை நடத்திய “திரெளபதி” கதாபாத்திரத்தின் பெயரை படத்திற்கு வைத்துள்ளேன்” என்கிறார் இயக்குனர் மோகன்.G.
தமிழ் சினிமாவில்படம் வெளியீட்டுக்கு முன்பு வெளியான பின்பு கருத்து ரீதியாக சர்ச்சைகளை சந்தித்த படங்கள் ஏராளம் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. தணிக்கைத் துறையில் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு மத்திய மாநில SC,STஆணையங்களின் சந்தேகங்களுக்கு, புகார்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டு தணிக்கைச் சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்படம் திரெளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 3 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகியுள்ள இந்தப் படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரையிடப்படும் பட்சத்தில் முதல் நாள் மூன்று கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்து, பட்ஜெட் படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படமாக சாதனை நிகழ்த்துவதற்கு வாய்ப்பிருப்பதாக திரையரங்கு விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img