spot_img
HomeNewsநலிந்த நடிகர் - நடிகைகளுக்கு நலத்திட்ட உதவிகள்! களமிறங்கிய கனி அன்ட் டீம்!

நலிந்த நடிகர் – நடிகைகளுக்கு நலத்திட்ட உதவிகள்! களமிறங்கிய கனி அன்ட் டீம்!



‘கொரோனா வைரஸ்’ பரவலைத் தடுப்பதற்காக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இதன் காரணமாக பலரும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பல குடும்பங்கள் சாப்பாட்டுக்கே சிரமப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கமும், தன்னார்வத் தொண்டமைப்புகளும் தேவையான உதவிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தனி நபர்கள் சிலர் குழுவாக இணைந்தும் நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார்கள்.
அந்த வரிசையில், சினிமா – சீரியல் படப்பிடிப்புகள் ரத்தாகியிருப்பதால் வேலையில்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிற, நலிந்த துணை நடிகர் – நடிகைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருட்களின் தொகுப்பை வழங்கியிருக்கிறது கனி அன்ட் டீம்.
படப்பிடிப்புக்கு துணை நடிகர் நடிகைகளை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிற நிர்வாகியாக இருக்கிறார் நடிகர் சங்க உறுப்பினர் கனி. அவருடன்  சிவா என்பவரும் இன்னும் எட்டு பேரும் குழுவாக இணைந்து கடந்த 5.4.2020 ஞாயிறன்று 200 குடும்பங்களுக்கு மேற்குறிப்பிட்ட நலத்திட்ட உதவிகளை சென்னை சாலிகிராமம் மற்றும் தேனாம்பேட்டைக்கு பயனாளிகளை வரவைத்து வழங்கியிருக்கிறார்கள்.

கனியிடம் பேசினோம்…
“அஜித், நயன்தாரா மாதிரியான பெரிய நடிகர், நடிகைகள் ஃபெப்சி தொழிலாளர் அமைப்புக்கு அவங்களால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா, நடிகர் சங்கத்துக்கு இன்னமும் அந்தளவு உதவிகள் கிடைக்கலை. ‘உதவிகள் கிடைக்கிறபோது கிடைக்கட்டும். அதுவரை நலிந்த நடிகர் – நடிகைகளுக்கு எங்களால முடிஞ்சதை செய்யணும்’னு நினைச்சோம். எங்கூட நடிகர் சங்க உறுப்பினர்கள்ல ஒருவரான சிவாவும் இன்னும் எட்டுப் பேரும் கை கோர்த்தாங்க.
உதவிக்காக சிலரை அணுகினோம். யோகிபாபு உட்பட சிலர் உதவி செஞ்சாங்க. அதை வெச்சு முதற்கட்டமா 200 பேருக்கு சிறியளவுல உதவியிருக்கோம். இரண்டாம் கட்டமா இன்னும் 200 குடும்பங்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதி நலத்திட்ட உதவிகள் செய்யப்போறோம்.
நாங்க தொடங்கி வெச்சோம். எங்களைப் பார்த்துட்டு ஃபீல்டுல ஸ்ட்ராங்கா இருக்கிற சிலர் தனித்தனியா உதவிகள் செய்ய முன்வந்திருக்காங்கன்னு தெரிய வருது. யார் செஞ்சா என்ன? சிரமப்படுறவங்களுக்கு உதவிகள் கிடைச்சா சந்தோஷம்” என்றார்.

உதவிகள் செய்ய முன்வருகிறவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: கனி 98408 18135 / சிவா 98847 40204

Must Read

spot_img