ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் ‘யாமிருக்க பயமே’!
எதிர்பாரா ஆச்சரியங்களைத் தரும் சில படங்களே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, எந்தக் காலத்திலும் பார்க்கத் தக்க படங்களாக தீவிர திரை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்த ‘யாமிருக்க பயமே’ திரைப்படம் இதற்கு மிகச் சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி ஆரவாரமின்றி இப்படம் வெளியானதென்றாலும், முதல் காட்சி முடிந்ததுமே பார்வையாளர்களின் நேர்மறை விமர்சனங்கள் காட்டுத் தீபோல் பரவியதைத் தொடர்ந்து, ரசிகர்கள் கூட்டம் அலை மோத திரையரங்குகள் கொண்டாட்டக் களங்களாயின. மர்மம் நிறைந்த திகில் கதையான இதில் கதாபாத்திரங்களுடன் நாமும் கலந்து இந்த அமானுஷ்யத்தில் பங்கு பெற்றோம்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இது குறித்து கூறுகையில், “இயக்குநர் டீகேயின் நகைச்சுவைத் திறனும், எதிர்பாரா தருணங்களில் முதுகுத் தண்டை சில்லிடச் செய்யும் காட்சியமைப்புகளும் ‘யாமிருக்க பயமே’ படத்தை மேம்படுத்தி வெற்றிக்கு வழி வகுத்தது. ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அப்படம் குறித்தான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்கள் மட்டுமின்றி, படம் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் “நன்றாக இருக்கிறது” என்று சொல்வதைக் கேட்டு அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் திரையரங்குகளுக்கு வருவதில்தான் வெகுவாக அடங்கியிருக்கிறது. இதுதான் ‘யாமிருக்க பயமே’ படத்துக்கு நடந்தது என்பதை படம் வெளியான ஆறாம் ஆண்டு தினமான இன்று நினைவு கூர்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மைல்கல்லாக அமைந்த யாமிருக்க பயமே படத்தின் உருவாக்கத்தில் பங்கு பெற்ற நட்சத்திரங்கள் கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன், ஆதவ் கண்ணதாசன் மற்றும் மயில்சாமி சார் ஆகியோருக்கும் படக்குழுவைச் சேர்ந்த இதர தொழில் நுட்பக் குழுவினருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். எங்களது முந்தைய தயாரிப்புகளான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’ ஆகிய படங்கள் நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்ட மதிப்பு மிகு பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலும், தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார்கள் என்பதை எங்களுக்கு உணர்த்திய படம் ‘யாமிருக்க பயமே’. ரசிகர்கள் பெரிய பட்ஜெட் படமா அல்லது சிறிய பட்ஜெட் படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று மட்டுமே பார்க்கிறார்கள். இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் ‘யாமிருக்க பயமே’ இரண்டாம் பாகத்துக்கான் ஆரம்ப கட்ட பணிகளில் இறங்கியிருக்கிறோம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரும்” என்றார்.
தற்போது ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தேசிய விருது பெற்ற வெற்றி மாறனின் இயக்கத்தில் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கும் படம் விரைவில் படப்பிடிப்புடன் துவங்கவிருக்கிறது