spot_img
HomeNews"ராட்டினம்" - இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம்

“ராட்டினம்” – இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம்

சில திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் பல கடந்த போதும் அது தரும் உணர்வுகள் குறைவதே இல்லை. சில படங்கள் பார்க்கும் போது நமக்கு தோன்றுவது “எப்படி சினிமாவில் சின்னஞ்சிறிய கதையை வைத்துக் கொண்டு எத்தனை அழகான படத்தை உருவாக்கிவிடுகிறார்கள்!”. அப்படியொரு திரைப்படம் தான் ராட்டினம். நம்மில் பலருக்கு இந்த படத்தை பற்றி தெரிந்து இருக்கும். முற்றிலும் புதுமுகங்களை கொண்டு ஒரு புதுமுக இயக்குனரால் இயக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய படம் ராட்டினம்.  2012 ல் வெளியான திரைப்படம்.

பதின்பருவ விடலை படங்கள் என்றாலே கவர்ச்சியும், கிளாமரும் தூக்கலாக இருக்கும். அது போல் குடும்பத்தோடு பார்க்க கஷ்டப்படுத்தும் எந்த காட்சியையும் வைக்காமல் தினந்தோறும் சமூகத்தில் நடப்பதை சினிமாவின் அழகியல் மொழியில் காட்டி முதல் படத்திலேயே தன் நேர்மையை பதிவு செய்கிறார் இந்த படத்தின் இயக்குனர் தங்கசாமி. படத்தின் முற்பாதியில் விடலைகளின் சந்தோஷம்  நிரம்பியிருக்கிறது, எந்த விதமான விரசமான காட்சியும் இல்லாமல்! ஒரு தூய சினிமாவை காணும் நிறைவு நமக்கு ஏற்படுகிறது.

இரண்டு தளங்களில் இப்படம் முக்கியமாகிறது. ஒன்று மனிதர்களின் செயல்களை சரி தவறு என்று தீர்ப்பு சொல்லாமல் நடைமுறை யதார்த்தத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறார்கள் அல்லது நம் முடிவுக்கே விட்டு விடுகிறார்கள். இன்னொன்று காதலர்களின் மனவுலகம். குடும்ப உறவு, காதலுக்காக அவர்கள் கொடுக்க வேண்டிய விலை இவற்றை மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு புள்ளிகளும் ஒன்று சேர்ந்து படத்தை அழகான கலைப்படைப்பாக்குகிறது.

நல்ல படங்களில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையும் உணர்வுகளும் குறைவான காட்சிகளின் வழியே பார்வையாளனுக்கு முற்றிலும் கடத்தப்பட்டுவிடும். அந்த மாயத்தை தன் முதல் படத்திலேயே இயக்குனர் நிரூபித்து காட்டி இருக்கிறார். அதே போல் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து இருப்பதாகவே படம் பார்க்கும் நமக்கு தோன்றாது. இது எளிதான விஷயம் அல்ல. அதுவும் இயக்குனரும் புதுமுகமாக இருக்கும்போது இது பெரிய சவால். இந்த சவாலை ஏற்று படத்தின் இயக்குனர் தங்கசாமி படத்தை தன் தோளில் ஏற்றி சுமந்து இருக்கிறார், வென்றும் இருக்கிறார்!  சினிமா என்பது கூடிக்கலையும் சந்தை போன்றது. கலைஞர்கள் வருவார்கள். ஒன்று சேர்ந்து வேலை செய்வார்கள். பின்பு கலைந்து போய்விடுவார்கள். படம் முடிந்த பிறகு இயக்குநர் மட்டுமே தனித்துவிடப்படுவார். அந்த ரிஸ்க்கை எடுத்த தங்கசாமியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஒரு புதுமுக இயக்குனருக்கு தயாரிப்பாளர், நடிகர், படப்பிடிப்பு இடங்கள் என எவ்வளவோ பிரச்சனைகள் வந்து இருக்கலாம், இருக்கும்! ஆனால் படத்தை பார்க்கும் போது எந்த நிலையிலும் தங்கசாமி சமரசம் செய்து கொள்ள வில்லை என்றே தெரிகிறது. திரைக்குப் பின்னே ஒரு முதல் பட இயக்குநரின் பிரச்சனைகள் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. அதுதான் உண்மையில் ராட்டினத்தில் தலைகீழாக சுற்றுவது ஆகும்.

இப்படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று காதலன் எதை பற்றியும் கவலைப்படாமல் காதலியை தேடி வரும் அவனின் கண்களில் மின்னுவது காதல். காதலியும் மனதிலுள்ள ஆசைகளைக் கண்களின் வழியாக மட்டுமே வெளிப்படுத்துகிறாள். இதை திரையில் காணும் போது நமக்குள் எங்கே இவர்களை பிரித்து விடுவார்களோ என்ற பதட்டம் எழுகிறது.நாம் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு மறைந்துவிடுகிறது. ராட்டினத்தில் ஏறி விடுகிறோம். அந்த பதட்டத்தை அப்படியே கொண்டுபோய் இறுதியில் நாம் நினைக்காத விதத்தில் கிளைமாக்ஸ் அமைந்து நமக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காதலனின் அப்பா இறுதியில் தன் மகனின் காதலியை பார்க்கும் போது, அவளின் குற்ற உணர்வை ஒரே ஒரு பார்வையில் வெளிப்படுத்துகிறாள். அந்த வயதான தந்தை சோகத்துடன் நடந்து செல்வதுடன் படம் முடிகிறது. படம் யாரையும் குற்றம் சாட்டுவதில்லை. நம் முடிவுக்கே விட்டு விடுகிறார் தங்கசாமி.

ராட்டினம் படத்தின் பாடலும் இசையும் மிகச்சிறப்பு. இசையமைப்பாளர்  பாராட்டிற்குரியவர். அதே போல் படங்களில் இதுவரை காணாத தூத்துக்குடியின் அழகை ரசிக்கும்படி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இந்த படம் பெற்ற வெற்றி, வசூல், வரவேற்பு, நல்ல விமர்சனங்கள் அனைத்தும் தங்கசாமியின் திறமைக்கு, நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த படத்தை பாராட்டி பாரதிராஜா, பாக்கியராஜ், கௌதம் மேனன் இன்னும் பலர் பேசிய அனைத்தும் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. அந்த திரை மேதைகளின் பாராட்டுக்கு எல்லா விதத்திலும் தகுதியான படம் ராட்டினம்.

இந்த படம் வெளிவந்து ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன! ஆனால் இந்த படத்தில் சொல்லப்பட்ட விஷயமும் இன்றுவரை சமூகத்தில் மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தெருவுக்கு ஒரு கதை இது போல் நடைபெறுவதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

Must Read

spot_img