சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகர் வேல்முருகன். இதைத்தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் தனது குரல் பங்களிப்பையும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்தும் தனது திரைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படத்தில் இவர் பாடிய ‘கத்தரி பூவழகி…’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைப்படங்களிலும் நாட்டுப்புற மேடைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்துவரும் வேல்முருகன் கொரோனா நோய் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார்.
கொரோனா நோய்க்காக பல்வேறு தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டாலும் வேல்முருகன் நடித்து வெளியாகியிருக்கும் ‘பச்சை மண்டலம்’ என்ற இந்த குறும்படம் மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் யாரும் சொல்லாத ஒரு முக்கியமான கருத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமான மனிதர்களை நாம் ஒதுக்கி வைக்கவோ புறக்கணிக்கவோ கூடாது என்பதையும், அவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்த வேண்டும் என்பதையும் உணர்த்தும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.
எனவே இந்த குறும்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும் பாராட்டுகளும் குவிகின்றன. இன்றைய சூழ்நிலையில் சமூகத்திற்கு மிக மிக அவசியமான விழிப்புணர்வு கருத்தோடு வெளியாகியுள்ள இந்த குறும்படத்துக்கு கொரோனா நோயை வெல்ல போராடும் அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கூட பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கொரோனா என்ற நோயினை மட்டுமே எதிர்க்க வேண்டும். தவிர்த்து, நோயாளியை எதிர்க்க கூடாது என்ற கருத்தை உணர்வு பூர்மமாக விளக்கும் ‘பச்சை மண்டலம்’ குறும்படத்தை ஷில்டன் தேவராஜ் இயக்கியுள்ளார். குறும்படத்தை கைஷோ கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.நாக சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்துள்ளார். கண்மணி ராஜா திரைக்கதை வசனத்தை எழுத, தஜ்மீல் ஷெரீப் இசையமைத்துள்ளார்.
இந்த குறும்படத்தில் பாடகர் வேல் முருகனுடன் சிற்றரசு, ரம்யா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.