உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் சார்பாக இந்த கடிதம் உங்களுக்கு எழுதப்படுகிறது.
பேமிலி மேன் 2 திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தவறான பார்வையை முன்வைத்திருப்பதை கண்டிக்கவும் இனிமேல் இது போல் தொடராமல் இருக்கவும் நாங்கள் எடுக்கும் முயற்சியை உங்கள் முன் வைத்து அதன் மூலமாக மக்களுக்கு எங்களின் நிலைப்பாட்டை பதிவு செய்ய விரும்புகிறோம்.
முதல் கட்டமாக பேமிலிமேன் 2 இணைய தொடரை உருவாக்கிய அமேசானின் தலைமை அலுவலங்களுக்கு எங்களின் ஆட்சேபனையை தெரிவித்து வருகின்றோம். அத்துடன் புலம்பெயர் வாழ் நாடுகளில் தன்னெழுச்சியாக தமிழ் மக்கள் அடையாள ஆர்ப்பாட்டங்களை கோவிட் விதிமுறைகளுக்கமைய ஒழுங்கு செய்து வருகின்றனர். இதன் முதல் கட்டமாக நேற்று இலண்டனில் அமேசான் காரியாலத்தின் முன் ஓர் அமைதிவழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இது போன்ற தொடர்கள் நம் தமிழக மண்ணில் நம்மோடு தாய் உறவுகளாக வாழும் எங்கள் சொந்தங்களையே பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. அதாவது இந்த தொடரில் நடித்தவர்கள், எழுதியவர்கள் என தமிழக மண்ணில் இருந்து சிலரால் இப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் அறியாமையாக விளக்கிட நினைத்தாலும் இவை எம் மனதை மிகவும் காயப்படுத்தி வலியை அதிகரிக்கிறது.
எனவே வருங்காலத்தில் இது போல் ஒரு படைப்பில் நம் கலைஞர்களோ எழுத்தாளர்களோ இயக்குனர்களோ இணைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உலகம் முழுதும் வாழும் தமிழர் அமைப்புகள் மூலமாக இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.
Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Irish Tamils Forum (ITF), La Maison du Tamil Eelam (MTE), Norwegian Council of Eelam Tamils (NCET), National Council of Canadian Tamils (NCCT), Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa) மற்றும் United States Tamil Action Group (USTAG) ஆகிய அமைப்புகள் இது தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறோம்.
‘தி ஃபேமிலி மேன் 2’ வலைத் தொடர் “ஒரு கற்பனையான படைப்பு” என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தாலும், ‘ஈழத் தமிழர்கள்’, ‘பருத்தித்துறை’, ‘ஈழம்’ மற்றும் ‘வட இலங்கை’ ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை, காட்சிகள் ஈழம் போருக்கு மிகவும் ஒத்திருக்கின்றமை ஆனது ஈழத் தமிழர்களை மோசமான முறையில் காட்ட முனையும் நன்கு திட்டமிடப்பட்ட செயலாகவே இது தெரிகின்றது.
“ஈழத் தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று இந்தத் தொடர், பிரச்சாரம் செய்கிறது. மாறாக, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இன அழிப்பு போன்ற அநீதிக்கு எதிராக நாங்கள் உலக நாட்டு சட்டங்களின்படி போராடி வருகிறோம். ஆனால் இன்றும் விடுதலை பற்றிய எங்கள் எண்ணங்களை அடக்குவதற்கான நோக்கத்துடன் வேலைகள் நடைபெற்று வருகின்றன “.
விடுதலைக்காக போராடும் பெண்களின் வாழ்க்கை முறை தவறாகவும், கீழ்த்தரமாகவும், விசமத்தனமாகவும் புனையப்பட்டிருக்கிறது. காரியம் நடக்க வேண்டி தமிழ் பெண்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற அச்சுறுத்தலை வேறு அது உலக மக்களுக்கு விதைக்கிறது.
தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள். “திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆதரவளித்துள்ளனர். ஈழத் தமிழர்களை மோசமாக காண்பிக்கும் இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்றும், தயாரிக்க வேண்டாம் என்றும் ஒரு சுற்றறிக்கையை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட வேண்டும்,” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடிதத்தின் நகல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனைவரும் இந்த செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மிக்க நன்றி.
இவ்வாறு
புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் அமைப்புகள்
உடனடித் தொடர்புகளுக்கு 00447814486087 அல்லது info@