spot_img
HomeNewsஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’.
சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.

ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார்.

‘சீன் அட் த அகாடெமி’ என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்கார் யூடியூப் சேனல் விவரிக்கையில்,” தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு தனது இடைவிடாத முயற்சியின் மூலம் நீதியைப் பெற்றுத் தந்த சமூக ஆர்வலரான வழக்கறிஞர் சந்துருவால் நடத்தப்பட்ட உண்மையான வழக்கு மற்றும் அதுதொடர்பான கள ஆய்வுகளின் அடிப்படையில் ‘ஜெய் பீம்’ உருவாக்கப்பட்டது. அத்துடன் கதை விவரிப்பும், அதனை எவ்வாறு திரைக்கதையாக்கி செயல்படுத்தப்பட்டது என்பதையும் எழுத்தாளரும், இயக்குநருமான தா.செ. ஞானவேல் வெளிப்படுத்திருக்கிறார்.” என குறிப்பிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில்,” ஒதுக்கப்பட்ட மக்களின் கதையை சித்தரித்த எங்களின் ‘ஜெய் பீம்’ திரைப்படம், உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.

இயக்குநர் தா.செ. ஞானவேல் பேசுகையில்,” தெரியாதவர்களின் கதையை சொல்லும் எங்களின் உண்மையான முயற்சி, உலக அளவில் கவனத்தை ஈர்த்ததன் மூலம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது உதவி கோரும் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான பலன்களை அறுவடை செய்கிறார்கள். இதுவே நாங்கள் பெறக்கூடிய சிறந்த விருது.” என்றார்.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’, ஆஸ்காரின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் இடம் பெற்றுள்ள செய்தி வெளியான பிறகு, தயாரிப்பாளர்களை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள திரை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://youtu.be/6tRv0L1Xq9Q

Must Read

spot_img