spot_img
HomeNewsபிக்பாஸ் மூலம்  ஸ்டார் ஆக முடியாது ! நடிகை ரேகா பேச்சு!

பிக்பாஸ் மூலம்  ஸ்டார் ஆக முடியாது ! நடிகை ரேகா பேச்சு!

பிக்பாஸ் மூலம்  ஸ்டார் ஆக முடியாது ! நடிகை ரேகா பேச்சு!

அழுகை கதாநாயகியாகவே  நடிக்க  வைத்து விட்டார்கள்! நடிகை ரேகா பேச்சு! பிக்பாஸில் நடப்பது உண்மையா ? பொய்யா? நடிகை ரேகா பேச்சு!

பிக் பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது என்று நடிகை ரேகா ஒரு விழாவில் கூறினார்.இதுபற்றிய விவரம் வருமாறு:

திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் வாணி மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா கலந்து கொண்டு ஆதிராவை வாழ்த்திப் பேசினார்.அப்போது அவர் பேசும்போது,

” நான்  பரதநாட்டிய நிகழ்ச்சிகள்  உட்பட நிறைய நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன்.

ஒரு முழு நிகழ்ச்சியும் ஒரு நிமிடம் கூட கவனம் சிதறாமல் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது இந்த ஆதிராவின் நடன நிகழ்ச்சியைத் தான்.

நீங்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தால் பார்க்க அழகாக இருக்காது. ஆனால் அவள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை புன்னகை புரிந்து கொண்டே இந்த நடனத்தை ஆடினாள். கொஞ்சம் கூட அவளது ஆற்றலின் அளவு குறையவில்லை.அப்படிச் சிரித்துக்கொண்டே  ஆடிய நடனம் அவ்வளவு அருமையாக இருந்தது. அதை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.

ரசிக்க ரசிக்கத்தான் கலைஞர்கள் வளர்வார்கள் .நாம் வளர வேண்டுமென்றால் நம்மை யாராவது ஊக்கப்படுத்தி, தூண்டுதலாக இருக்க வேண்டும்.

ஆதிராவுக்கு அமைந்துள்ள பெற்றோர்  கடவுள் தந்த பரிசு.அவள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை.

துளிக்கூட பதற்றமில்லாமல் சலனமில்லாமல் சபையை கவர்ந்து கொண்டு முழு நம்பிக்கையுடன் அவள் ஆடிய நடனம் மிகப் பிரமாதம்.

இசைக்குழுவினரும்  ஒரு  துளியளவு கூட பிழை நேராமல் துல்லியமாகப் பாடி அவள் நடனத்தை உயர்த்திப் பிடித்தார்கள்.நான் வந்து அமர்ந்தது முதல் முழு நிகழ்ச்சியையும் அனுபவித்து ரசித்தேன்.

இந்த அரங்கம் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். இந்தக் கொடிய தொற்றுக் காலத்தில் இவ்வளவு பேர் வந்திருந்ததில் மகிழ்ச்சி. நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் இந்த சூழலில் இருந்து நாம் மீளவேண்டும் என்று.

ஏதாவது கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கே நர்த்தகி நடராஜ் அவர்கள் பேசினார்கள். நானும் கே.ஜே.சரசம்மாவிடம் நடனம் கற்றுக்கொள்ளப் போனேன். மூன்று நான்கு மாதங்கள் தான் போயிருப்பேன்.அலாரிப்பு வரை போனேன் .அதன்பிறகு அரைமண்டியில் உட்கார் என்றார்கள்.  எங்கே அரைமண்டியில் உட்கார்வது?அதற்குமேல் படங்களில் பிசியாகி விட்டேன்.படங்களில் கிளிசரினைக் கொடுத்து அழுகை கதாநாயகியாகவே தொடர்ந்து நடிக்க  வைத்து விட்டார்கள்.

பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும்போது நாம் ஒரு சிற்பமாக மாறிவிடுவோம்.அதில் சிறு தவறு ஏற்பட்டாலும் எல்லாமே வீணாகிவிடும்.எனவே நான் படங்கள் தொடர்ந்து நடித்ததால் அலாரிப்புடன் என் நடனப் பயிற்சி  முடிந்தது.
அந்த நடனத்தைத் தொடர முடியவில்லை.  இப்போது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.நீண்ட நாள் கழித்து அந்தப் பழைய நினைவுகள் இப்போது எனக்கு வந்து விட்டன.

நமக்குத் தட்டிக் கொடுக்கவும் ஊக்கப்படுத்தவும்  யாராவது ஒருவர் உடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த கொரோனா காலகட்டத்தில் வெளியே செல்லாதீர்கள் என்று  ரொம்பவே பயமுறுத்துகிறார்கள். எனவே நான் எங்கும் வெளியில் செல்லாமல் இருந்தேன்.
அப்படிப்பட்ட சூழலில் இங்கே வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்து விட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறாள். அங்கே மகளைத் தனியே விட்டுவிட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசா கிடைக்காமல் நாங்கள் கணவன் மனைவி மட்டும் இங்கே தனியே இருக்கும்போது வருத்தமாக இருந்தது.சரி ஒரு பதினைந்து நாள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன் .
பிக்பாஸில் நடப்பது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தேன்.அது முடிந்தவுடன் குக் வித் கோமாளி போய்விட்டு வந்தேன்.

பிக்பாஸில் அந்த நூறு நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள்.உதாரணமாக சனமாக இருக்கட்டும் வேறு யாராகவும் இருக்கட்டும், நான் தான் சமைக்கிறேன் என்று சொன்னேனே என்று சண்டை போடுவது வரை பாருங்கள்,அதுதான் மக்களுக்குப் பிடிக்கிறது. எனவேதான் சண்டைபோடும் சூழ்நிலைகளை உண்டாக்குகிறார்கள். அடிக்கடி சண்டைகள் நடக்கும் ,வெள்ளிக்கிழமை  மீண்டும் சேர்ந்து கொள்வார்கள்.சனி ஞாயிறு மாறிவிடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும்.

பிக்பாஸ் மூலம் ஒரு நூறு நாட்கள்தான் பிரபலமாக இருக்கமுடியும். பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது.ஆனால் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை.
அந்த நிலையில் யாரும் பொறுமையாக இருந்து காண்பிக்க வேண்டும். நான் 15 நாட்களும் பொறுமையாக இருந்தேன் .என் மீது நிறைய பேருக்குப் பொறாமை இருந்தது.
எல்லாம் சாதித்துவிட்டு வந்திருக்கிறார் என்று.

நான் சொல்வேன் சாதித்த பிறகுதான் மிகவும் அர்ப்பணிப்புடன் பொறுமையாக இருக்க வேண்டும் என்று. நான் நடித்த படங்களில் எல்லாம் படப்பிடிப்புகளுக்குச் சரியான நேரத்தில் சென்று பொறுமையாக இருந்ததால்தான் இதை என்னால் செய்ய முடிந்தது.ஆனால் பொறாமை எண்ணங்களோ கர்வமோ இருக்கக் கூடாது. ‘நான் இவ்வளவு பெரிய ஆள், நான் ஏன் 17 பேருக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும்?’ என்றெல்லாம் நினைக்கக்கூடாது.அதையெல்லாம் நான் நினைக்காமல் அந்த வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்த்தேன்.

நாம் எப்போதும் சும்மா இருக்கக்கூடாது  இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.அது போல எப்போதும் நம்முடைய நம்பிக்கையைக் கைவிடக்கூடாது.கண்ணாடியில் பார்த்து நம்முடைய அழகையும் பராமரிக்க வேண்டும்.அதுதான் நமது பலம்.எப்போதும் நான் இளமையாக உணர்வேன். அதனால்தான் நான் ஒரு யூடியூப் சேனல் (ரேகாஸ் டைரி ) தொடங்கியிருக்கிறேன். ஆனால் எட்டு  கோடி பேர் இருக்கும்போது 45 ஆயிரம் பேர் மட்டும் தான் பார்க்கிறார்கள் என்று வருத்தமாக இருந்தது. அதற்குப்பிறகு கூகுளில் தேடிய போதுதான் ’எந்த விஷயத்திலும் தோல்வியில் துவளாதீர்கள்.தோல்வியில்தான் உங்களுக்கு இருக்கிறது வெற்றி’ என்று இருந்ததைப் பார்த்ததும் நான் சமாதானம் அடைந்தேன்.

நான் எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்வதால் தான் இந்த 2000 கிட்ஸ்- தலைமுறையுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஆதிராவின் பெற்றோர்கள் அவளை  நன்றாக ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள் .பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளைகளிடம் தாங்கள் இஷ்டப்பட்டதைத் திணிக்கக்கூடாது.  பிள்ளைகளிடம் தானாகக் கற்றுக்கொள்ள விருப்பம்  வரவேண்டும்”என்று கூறி வாழ்த்தினார்.

கலைகளைக் கற்றுக் கொள்ள எந்தத் தடையும் கிடையாது! – நர்த்தகி நடராஜ் பேச்சு கலையை உடல் தீர்மானிப்பதில்லை!
– நர்த்தகி நடராஜ் பேச்சு நுண்கலையைக் கற்றுக் கொடுப்பவர்களே சிறந்த பெற்றோர்!
– நர்த்தகி நடராஜ் பேச்சு திருநங்கை சமூகத்தில் ஜாதி மத பேதம் இல்லை! நர்த்தகி நடராஜ் பேச்சு

ஆதிரா பிரகாஷ் நடன அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ, கலைமாமணி பட்டங்கள் பெற்றவரும் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினருமான டாக்டர் நர்த்தகி நடராஜ்   கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது,
“மாசில் வீணையும் மாலை மதியமும் பாடலில் வருவதுபோல ஆதிராவின் நடனத்தில் நாம் இறைவனைத் தரிசித்தோம். ஆதிரா என்பது அழகான பெயர். ஆதிரைநாள் பற்றியும் நம் அனைவருக்கும் தெரியும்.ஆதிரை சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம். சிதம்பரம் திருக்கோயில் உற்சவத்தில் எம்பெருமானின் அழகைப் பார்ப்பதற்கு
திருவாதிரைத் திருநாள் அன்று யாரெல்லாம் வந்தார்கள் என்று ‘ஆரார் வந்தார் ?’  ஒரு பாடல் வரும்.

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில், அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி,இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள்,திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்,பல்லாண்டு கூறுதுமே. என்று அழகாகச் செல்லும் அந்தப் பாடல்

நீங்கள் யார் யார் வந்தார் என்பதெல்லாம் கனகசபையில் கணக்கெடுக்கப் படுகிறது என்று பொருள்.

இன்றும் பல்லாண்டு நிகழ்வு நடந்தது போல் அற்புதமான நிகழ்வாக மாறியிருக்கிறது.

நாங்கள் எத்தனையோ இடர்களைக் கடந்து இந்தத் துறையில் எங்களுக்கான இடத்தைத் தக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதற்குள் நாங்கள் சந்தித்த
கேலிகள் . ஏளனங்கள், புறக்கணிப்புகள் ஏராளம்.

நான் வெற்றி அடைந்து விட்டேன் என்று என்று தீர்மானிக்கிறேனோ , அன்று நான் முடிந்து விட்டேன் என்று பொருள். நான் இன்றுவரை கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவியாகத்தான் உணர்கிறேன்.என் வாழ்நாள் முழுக்க மாணவியாகவே இருக்க விரும்புகிறேன்.
அப்போதுதான் முழுமையாகக் கற்றுக்கொள்ளமுடியும்.

ஆதிரா இங்கே அருமையாக ஆடிக்  காட்டினாள். இப்படி நான் சொல்லும்போது நான் எந்தவித இலக்கணப் பிழைகளும் பார்க்கவில்லை. தொழில் முறை நடனக் கலைஞர்களாக நாங்கள் பார்க்கும் போது எங்கள் கண்கள் எப்பொழுதும் அந்த நடனத்திலுள்ள தவறுகள்.
வெற்றிகள், அழகுகள், சிரிப்புகள், சிலிர்ப்புகள் என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து உற்று நோக்கி ஆராயும்.பக்கவாத்தியக் கலைஞர்கள்  வாசிப்பதைப் பார்ப்போம்.அப்படி இலக்கணம் பார்க்கும் ஒரு உணர்வை, அந்த  மனநிலையை இன்று நான் மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்தக் குழந்தை  மேடையை எப்படி நிர்வகிக்கிறாள் என்று மட்டுமே நான் பார்த்தேன்.உங்களது கைத்தட்டல் தான் அதற்கு மிகப்பெரிய சாட்சி.  கைத்தட்டல் இல்லாமல் இந்த நர்த்தகி  இல்லை.

மேடையில் நிற்பது என்பது அவ்வளவு இலகு கிடையாது.மேடைக்கு வந்து விட்டாலே ஒரு உதறல் கொடுக்கும்.

நான் உலக நாடுகளில் பல மேடைகளில் நடனமாடிய போதும்கூட  மேடைக்கு வரும் போது இப்போது தான் முதலில்
வருவது போல ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும்.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்  எனக்குள் நான் படும்பாடு என் தோழி சக்திக்கு மட்டும்தான்  தெரியும்.

ஆதிரா பக்கவாத்தியம் பற்றி லட்சியம் செய்யாமல் கைதட்டல்கள் பற்றி கவலைப்படாமல் தன்னை உணர்ந்து தன் ஆற்றலை வெளிப்படுத்தி தன் குருநாதர் என்ன சொன்னாரோ அப்படி அர்ப்பணிப்போடு தன்னை உணர்த்தி செய்து காட்டி இருக்கிறாள்.

இந்த அரங்கேற்றம் ஒரு நல்ல தொடக்கமாக இன்று அவளுக்கு அமைந்திருக்கிறது.
ஆதிராவை இந்த அளவுக்குச் செதுக்கி  இருக்கும் அவரது குருநாதர் செந்தில் அவர்களை நான் பாராட்டுகிறேன்.அரங்கேற்றம் என்பது கோவிலில் சாமி பார்க்கப் போகும்போது ஏற்படும் ஒரு புனிதத்தன்மையைப் போன்றது .எல்லாரும் அரங்கேற்றத்திற்கு வந்துவிட முடியாது.அதற்கு எல்லாரது ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும் .உண்மையில் ஆதிராவின் தாத்தா கலைத் துறையில் புகழ் பெற்ற எம்.ஜி. வல்லபனின் ஆசீர்வாதம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது.

இந்தக் கொரோனா காலகட்டத்தில் நான் ஒவ்வொரு மேடையிலும் கூறுவதுண்டு. எந்தப் பெற்றோரும் தங்களது குழந்தைகளை நுண்கலைகளில் ஆட்படுத்துகிறார்களோ அவர்கள் தான் வெற்றி அடைந்த பெற்றோர்கள் என்று.இன்று உலகமயமாக்கல் என்கிற சூழலினால் நம் குழந்தைகள் நம் வசத்தில் இல்லை என்கிற உண்மையை மறுக்க முடியாது.

இங்கு ஒரு குழந்தைக்கு குடும்பத்தை விட அவள் கையில் இருக்கும் அந்த கைபேசி தான்  நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட சூழலில் அவளுக்கு எங்கே கல்வியும் கலையும் வந்துவிட முடியும் ? அப்படிப்பட்ட நிலையில் ஆதிரா போராடி இந்தக் கலையை கற்றுக் கொண்டிருக்கிறாள்.

இந்த நாட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் எல்லாருக்கும் இந்த நுண்கலைகளின் நுணுக்கம் வந்து சேர்வதில்லை.இசையும் நடனமும் ஓவியமும் சிற்பமும்
எதுவாக இருந்தாலும் உடலால் செய்துவிடமுடியாது.
கலையை உடல் தீர்மானிப்பதில்லை.புலன் தான் தீர்மானிக்கிறது. புலன் என்றால்
உணர்வு.
ஐந்து புலன்களையும் ஒருங்கிணைத்து கொண்டுவந்தால் மட்டுமே இந்த கலையைக் கற்றுக்கொள்ள முடியும். அப்படித்தான் இன்று ஆதிரா ஆடி அமர்ந்திருக்கிறாள்.

பாட்டு, தாளம், ஆசிரியர் சொல்லிக் கொடுத்த அடவு முறைகள், மட்டுமல்ல அழகான தோற்றத்தையும் கவனித்துக்கொண்டு
இப்படி எத்தனையோ கோட்பாடுகளை ஏற்று அவளது உடல் வழியே உள்ளத்தில் சென்று அது வெளிப்படும் போது அங்கே ஒரு அழகான சிற்பம் தோன்றும்.

அதில் நடராஜர், உமாதேவி, சரஸ்வதி தெரிவார்கள். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் அவரது பெற்றோர்கள் தெரிவார்கள்.

இனி வரப்போற காலத்தில் குடும்ப உறவுகள் வறட்சியாகும் நிலையில் நாம் இருக்கிறோம்.
போட்டி உலகத்தில் இன்ப துன்பங்களை மறந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இந்தக் கோவிட் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறது. இன்றைய பொழுது மாத்திரமே நமக்கு உள்ளது என்று. கோவிட் மூலம் எத்தனை பேரை இழந்து இருக்கிறோம்?

இங்கே வாசித்த பக்க கலைஞர்கள் என் ஆரம்ப நாட்களில் என் வெற்றிக்கு தன்னலம் பாராது உழைத்தவர்கள். அவர்களைப் பாராட்ட வேண்டும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு “பொறியாளர்களுக்கு எதற்கு நடனம் ?”என்று பேசியிருந்தேன்.
அது தகவல் தொழில்நுட்பத் துறைக்குப்  போய் சேர்ந்திருக்கிறது .நடனமும் இசையும் அனைவருக்கும் தேவை.

உடல் பருமன், ஒல்லி, குட்டை, உயரம், சிவப்பு ,கறுப்பு ,மதம், ஜாதி என்று எதுவும் தேவையில்லை.
எங்கள் திருநங்கை சமூகத்தில் இவை எதுவுமே கிடையாது.கலைகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது.எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

எத்தனையோ கேலிகள், தடைகள் , ஏளனங்களை எல்லாம்  கடந்து தான் நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம்.இவ்வளவு சூழல்களுக்கு இடையில் எங்களால் சாதிக்க முடியும் என்றால் உங்களுக்கு வசதியாக எல்லாமே கையருகே உள்ளது .நீங்களும் எவ்வளவோ சாதிக்க முடியும்” இவ்வாறு நர்த்தகி நட்ராஜ் பேசினார்.

நிகழ்ச்சியில்  சமர்ப்பணா அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் இயக்குநர்

‘நாட்டிய சங்கீத கலா பாரதி’ சுவாமிமலை கே .சுரேஷ் இன்னொரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஆதிராவின் நடன ஆசிரியர்கள்  என். செந்தில் குமார் ,மைதிலி, பத்மாவதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.விழாவில் ஆதிராவுக்கு மிருத்யகலா நர்த்தகி பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நாட்டிய நிகழ்ச்சிக்கான இசைக்குழுவில் வாய்ப்பாட்டு சித்ராம்பரி கிருஷ்ணகுமார், நட்டுவாங்கம் என். செந்தில்குமார் ,மிருதங்கம் தனஞ்செயன், வயலின்  சிகாமணி ,புல்லாங்குழல் சுருதிசாகர், வீணை அஞ்சனா சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை  ஆதிராவின் பெற்றோர் அர்ச்சனா , பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.

Must Read

spot_img