spot_img
HomeNewsநிக்குமா நிக்காதா?' குறும்படம் வெளியீடு

நிக்குமா நிக்காதா?’ குறும்படம் வெளியீடு

நிக்குமா நிக்காதா?’ குறும்படம் வெளியீடு

விக்கலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் குறும்படம் ‘நிக்குமா நிக்காதா?’
நடிகர் சாம்ஸ் பாராட்டு.

தமிழ் சினிமாவின் மார்க்கெட்டிங் துறைக்கு இளைய தலைமுறையினர் வரவேண்டும்!

நடிகர் சின்னிஜெயந்த் வேண்டுகோள்

இப்போது மத்திய அரசை  நடிகர் விஜய் விமர்சிப்பதில்லையே ஏன்?

தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு.

ஏராளமான திறமைசாலிகள் நிறைந்திருக்கும் தமிழ் திரைஉலகில் ஃபிலிம் மார்க்கெட்டிங் என்ற துறையில் இளைய தலைமுறையினர் ஈடுபட வேண்டும் என நடிகர் சின்னிஜெயந்த் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடைசி பஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘ நிக்குமா நிக்காதா? ‘என்கிற குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த குறும்படத்தில் நடிகர் ஆதேஷ் பாலா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை தமிழரசி நடித்திருக்கிறார் இவர்களுடன் நடிகர் ராம்குமார் பழனி, ‘சிரிக்கோ’ உதயகுமார் கார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்கலையும், லிப் டு லிப் கிஸ்ஸையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த குறும்படத்தை கடைசி பஸ் கார்த்திக் இயக்கியிருக்கிறார்.

இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநரும், கதாசிரியரும், வசனகர்த்தாவான லியாகத் அலிகான்,  இயக்குநர் கஸாலி, தயாரிப்பாளர் கே. ராஜன், பாடலாசிரியர் முருகன் மந்திரம்,
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் சீனிவாசன்,
நடிகர்கள் சாம்ஸ், ரோஷன் ராஜ் கிருஷ்ணா, சின்னி ஜெயந்த்,   சம்பத்ராம் , தேவன், நாயகன் ஆதேஷ் பாலா, நடிகை தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சாம்ஸ் பேசுகையில்,
” நிக்குமா நிக்காதா’ வில் நடித்திருக்கும் ‘குறும்பட உலக கமல்ஹாசன்’ ஆதேஷ் பாலாவுக்கும், ‘குறும்பட உலக சுருளிராஜன்’ உதயகுமாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். விக்கல் நிக்குமா நிக்காதா? என்பதை மையமாக வைத்து இந்த குறும்படத்தை சுவாரஸ்யமாக உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு காட்சியில் தப்பித்த ஆதேஷ் பாலா, மூன்றாவது காட்சியில் லிப் டு லிப் கிஸ் அடித்திருக்கிறார். குறும்படத்தில் ஒரு துணிகரமான முடிவை எடுத்திருக்கிறார்கள். இதுவே இணையத்தில் வைரலாகி விடும். பேசப்படும் விசயமாகவும் இருக்கிறது. ஏனெனில் இது மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கிறது. விழாவுக்கு வருகை தந்திருக்கும் நடிகர் ரோஷன் ராஜ் கண்ணா இதை காணப் பொறுக்கமுடியாமல், அவர் பேசும்போது ஆதேஷ் பாலாவிற்கு முத்தம் கொடுத்தார். இந்தப் படத்தைப் பார்வையிட்ட பாடலாசிரியர் முருகன் மந்திரம், இந்த படத்தில் இரண்டு பாடல்களை இந்த இடத்தில் வைக்கலாம் என்று ஐடியா கொடுத்து, தனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார். அதனால் நாயகனுக்கு அண்ணன், தம்பி என ஏதேனும் கதாபாத்திரம் இருந்தால், அதில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தற்போதைய சூழலில் கையில் செல்போன் வைத்திருக்கும் இளைஞர்கள் வித்தியாசமான கன்டென்ட்டை யோசித்து அசத்தி வருகிறார்கள். அதனால் இந்தக் குறும்படம் திரைப்படமாக உருவாகும் போது  நிறைய மெனக்கெட வேண்டும். அப்போதுதான் ஏராளமானவர்களின் மனதைக் கவர இயலும். இதை இந்த படக்குழுவினர் சாதிப்பார்கள் என நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் சின்னிஜெயந்த் பேசுகையில்,

” என்னுடைய நண்பர்களுக்காக இவ் விழாவிற்கு வந்திருக்கிறேன். இந்திய திரையுலக சரித்திரத்தில் ஒரே ஒரு நடிகரின் மகன் தான் ஐஏஎஸ் ஆகியிருக்கிறார். அதுவும் என் மகன்தான் என டெல்லியிலிருந்து சிலர் தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்த போது, உண்மையில் மகிழ்ச்சி அடைந்தேன். தந்தையாக அல்ல. தமிழ் நடிகர் ஒருவரின் வாரிசு என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் சிவகுமார் என்னிடம் சினிமாக்காரர்களுக்குப் படிக்கவும் தெரியும் என்பதை உனது மகன் நிரூபித்து விட்டான் எனப் பாராட்டினார். அவனை பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான ‘கும்கி 2’ படத்தில் நடிகராக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவன் நடிப்பதில் விருப்பமில்லை தொடர்ந்து படிக்கிறேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான்.

நிக்குமா நிக்காதா? படத்தின் டைட்டில் கவர்ச்சியாக இருக்கிறது. படத்தின் திரைக்கதையும் நன்றாக இருக்கிறது. இன்று முதல் இந்த படத்தினை நான் என்னுடைய நண்பர்களிடம் விளம்பரப்படுத்த தொடங்கி விடுவேன். இதனை முழுநீளத் திரைப்படமாக உருவாக்கினால், இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டு வெற்றி பெறலாம்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். ஏராளமானவர்கள் இயக்கம், இசை, நடிப்பு, கேமரா, தொழில்நுட்பம் என பல துறைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் யாரும் ஃபிலிம் மார்க்கெட்டிங் என்ற துறையில் அடியெடுத்து வைப்பதில்லை. எம்பிஏ பட்டதாரிகளெல்லாம் ஃபிலிம் மீடியேட்டராக மாற வேண்டும். இவர்களெல்லாம் விநியோகஸ்தராகவும் பணியாற்ற வேண்டும். இளைய தலைமுறை திரைத்துறையில் திரைப்படத்தை சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் இந்தத் துறையின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும். மும்பை மற்றும் ஹைதராபாத்தில் சாதாரண இளைஞர்கள் கூட கையில் லேப்டாப்புடன் தங்களது மார்க்கெட்டிங் பணியினை நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள். எம் பி ஏ படித்த பட்டதாரிகள் ஃபிலிம் மார்க்கெட்டிங் துறையில் ஈடுபட்டால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் மேம்பட்டதாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறார்கள். ” என்றார்.‌

நடிகர் ஆதேஷ் பாலா பேசுகையில்,

”  திரையுலகில் என்னை நடிகராக அறிமுகம் செய்த இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நடிக்க வேண்டும் என்று விரும்பியதும், இயக்குநர் கே. பாக்யராஜ் அவருடைய ‘கதையின் கதை’ என்ற தொடரில் நடிகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இயக்குநர் தியாகராஜன்,’ மம்பட்டியான்’ படத்தில் நல்லதொரு வேடத்தை வழங்கி என்னுடைய வளர்ச்சிக்கு வித்திட்டார்.  என்னுடைய தந்தையின் அறிமுகத்தை வைத்து பாக்யராஜ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானேன். அதன்பிறகு எனக்கு திரைத்துறையில் போலீஸ் மற்றும் அடியாள் வேடத்தில் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இத்தகைய வேடங்கள் கிடைத்து வந்ததால், மாற்றத்திற்காக என்னை நானே நாயகனாக நடிக்க விரும்பி அதற்கான தேடலில் ஈடுபட்டேன். என்னுடைய அம்மாவின் கனவும் இதுதான். அதனால் அதனைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறேன்.

இயக்குநர் கார்த்திக் என்னுடைய ஏழாண்டு கால நண்பர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு என்னை சந்தித்து நிக்குமா நிக்காதா? கதையைச் சொன்னார். ஆனால் இந்தக் கதையில் இடம்பெறும் முத்தக் காட்சியில் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின் போதும் தயக்கம் இருந்தது. இயக்குநர் முத்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து இதனை விளம்பரப்படுத்தப் போகிறேன் என்றதும் என்னுள் உதறல் எடுத்தது. பயமும் ஏற்பட்டது. ஆனால் இயக்குநர் எனக்கு நம்பிக்கை அளித்தார். இதற்காக இயக்குநருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த ‘சிரிக்கோ’ உதயகுமாருருக்கும் எனக்கும் நல்லதொரு கெமிஸ்ட்ரி உண்டானது. நான் திரைத்துறையில் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.” என்றார்.

நடிகை தமிழரசி பேசுகையில்,

” இயக்குநர் கார்த்திக் என்னை சந்தித்து கதையை விவரித்தபோது முத்தக்காட்சியைப் பற்றி குறிப்பிட்டார். முதலில் நடிக்கத் தயங்கினேன். பிறகு கதைக்கு அவசியம் என்பதால் முத்தக்காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர், நடிகர் ஆதேஷ் பாலா மற்றும் படக்குழுவினரின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த காட்சிகள் இயல்பாக நடித்தேன்.” என்றார்.

இயக்குநர் கார்த்திக் பேசுகையில்,

” நடிகர் ஆதேஷ் பாலா என்னுடைய நண்பர். அவருக்கு ஒரு நாள் போன் செய்து, நிக்குமா நிக்காதா? கதையை சொல்லி, நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றேன். வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு விக்கல் நிற்கவில்லை. அவர் விக்கலை நிற்க வேண்டுமானால் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட வேண்டும் என்று விவரித்தபோது, அவர் முதலில் தயங்கினார். பிறகு அவர் தனது அம்மாவுடன் விவாதித்து நடிக்க ஒப்புக் கொண்டார். கிளைமாக்ஸில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவரது தோற்றத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் முழு மனதுடன் ஒப்புக் கொண்டார். 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த குறும்பட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தியதற்கு தமிழ் சினிமா கம்பெனி நிறுவனத்திலுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில்,

” நிக்குமா நிக்காதா? என்ற தலைப்பு நன்றாக இருக்கிறது குறும்படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டபோது விக்கலைப் பற்றியது என்றார். நம்முடைய  பெரியோர்கள் விக்கலை நிறுத்துவதற்கு, ஆச்சரியமான விசயத்தை சொல்வார்கள். அதைக் கேட்டவுடன் விக்கல் நின்றுவிடும். ஆனால் இயக்குநர் கடைசி பஸ் கார்த்திக் விக்கலை நிறுத்துவதற்கு வித்தியாசமான மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார். முத்தம் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும் என்று கண்டுபிடித்திருக்கிறார். இந்த குறும்படத்திற்கு என்னை நாயகனாக நடிக்க வாய்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதற்காக நிதி உதவியும் செய்திருப்பேன். குறும்படமாக இருந்தாலும் வித்தியாசமான சிந்தனையுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் நிக்குமா? நிக்காதா? அமைதியாக இருந்த நாட்டில் திடீர் திடீரென்று மதக்கலவரங்கள் உருவாகிறதே. இது நிக்குமா நிக்காதா? அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் லஞ்சம் லாவண்யம் நிக்குமா? நிக்காதா.? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகளிடம் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணம் மற்றும் அது தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்படாமால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதே. இந்த அக்கிரமம் நிக்குமா நிக்காதா?

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள், மதிய வேளையில் நெய்வேலியிருந்து வலுக்கட்டாயமாக சென்னைக்கு வாகனத்தில் அழைத்து  வந்தனர். அந்தப் பயணத்தின் போது என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு நடிகர் விஜய் மத்திய அரசை விமர்சித்தோ. ஜிஎஸ்டி குறித்தோ இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதுபோன்ற விவகாரங்கள் நிக்குமா நிக்காதா? கட்சியில் ரவுடிகளை சேர்த்துக் கொள்கிறீர்கள். இதனால் அராஜகம் உருவாகுமே. இந்தப் போக்கு நிக்குமா நிக்காதா? 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களே.. இது நிக்குமா நிக்காதா? பால்ய வயது சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் நிக்குமா நிக்காதா?

இதுபோன்ற நியாயமான கேள்விகளை எழுப்புவதால் இந்த படத்தின் தலைப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மலையாள சினிமாவில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்தால், அதில் கதாநாயகனாக நடிக்கும் நடிகருக்கு 20 முதல் 25 சதவீதம் தான் சம்பளம் தருவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 50 முதல் 60% சம்பளமாக தரவேண்டிய நிலை இருக்கிறது. எனவே குறும்படமான இந்தப் படத்தை திரைப்படமாக உருவாக்கும்போது முறையான திட்டமிடலுடன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். ஏனெனில் இன்று சினிமா பிசினஸ் என்பது ஆரோக்கியமாக இல்லை. ஒவ்வொரு படக்குழுவினரின் சாமர்த்தியத்தால் தான் வெற்றி பெற வேண்டியதிருக்கிறது. இந்த குறும்படத்தில் நடித்திருக்கும் மறைந்த நடிகர் சிவராமனின் வாரிசு ஆதேஷ்பாலாவும், மற்றொரு நகைச்சுவை நடிகர் சந்திரன் பாபுவின் மகனான உதயகுமாரும் திரையுலகில் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில்  நிக்குமா நிக்காதா? குறும்படத்தை தயாரிப்பாளர் கே ராஜன் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

Must Read

spot_img