spot_img
HomeNewsதமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வரும் ‘ஃபாரின் சரக்கு’

தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வரும் ‘ஃபாரின் சரக்கு’

’ஃபாரின் சரக்கு’ படம் வழக்கமான சினிமாவாக இருக்காது – இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமி நம்பிக்கை

பல்வேறு துறையில் சாதித்த பலர் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தினால் திரைத்துறையில் நுழைந்து சாதித்து வருகிறார்கள். அந்த வகையில், கப்பலில் பணியாற்றிய மூன்று இளைஞர்கள் சினிமா மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தங்களது சொந்த முயற்சியில் திரைப்படம் ஒன்றை இயக்கி தயாரித்திருப்பதோடு, அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறார்கள்.

ஆம், கப்பலில் ஒன்றாக பணியாற்றிய விக்னேஷ்வரன், கோபிநாத் மற்றும் சுந்தர் ஆகியோர் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, படிக்கும் காலம் மற்றும் பணியாற்றிய காலம் என்று 20 குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய குறும்படத்தை பார்த்து பலர் பாராட்டியதை தொடர்ந்து இனி திரைப்படம் எடுப்பதில் இறங்க வேண்டும், என்று முடிவு செய்தவர்கள் தங்களது பணியை விட்டுவிட்டு முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பினார்கள். அதன்படி,  கப்பலில் பணியாற்றி சம்பாதித்த பணத்தை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார்கள் இந்த மூன்று நண்பர்கள்.

நெப்ட்டியூன் சய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Neptune Sailors Production) என்ற நிறுவனம் சார்பில் கோபிநாத் தயாரித்திருக்கும் இந்த படத்தை விக்னேஷ்வரன் கருப்புசாமி இயக்க, சுந்தர் மற்றும் கோபிநாத் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமியிடம் படம் குறித்து கேட்ட போது, “படிக்கும் காலத்தில் இருந்து சினிமா மீது மிகப்பெரிய ஈடுபாடு உண்டு. அதனால் தான் பல குறும்படங்களை எடுத்து வந்தேன். பிறகு கப்பல் பணியில் சேர்ந்த போது, அங்கே இருந்த சுந்தர் மற்றும் கோபிநாத் ஆகியோரும் என்னை போலவே சினிமா மீது ஆர்வமாக இருந்ததால் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பல குறும்படங்களை எடுத்தோம். ஒரு கட்டத்தில் குறும்படங்கள் எடுத்தது போதும்,  திரைப்படம் எடுக்கலாம் என்று மூன்று பேரும் முடிவு செய்தோம்.

எங்கள் மூன்று பேருடைய முயற்சியில் உருவாகியிருக்கும் ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் பணிகள் நிறைவு பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் தலைப்பு மற்றும் டீசர் பாராட்டு பெற்று வரும் நிலையில், சரக்கு என்றாலே மதுபானம் என்ற கண்ணோட்டத்தில் பலர் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் இங்கு குறிப்பிட்ட சரக்கு மதுபானம் அல்ல, அது வேறு ஒன்று. அது என்ன? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் அது தான் கதையின் மையப்புள்ளி.

குஜராத்தில் தொடங்கும் கதை தமிழகத்தில் முடிவடையும். இது தான் ’ஃபாரின் சரக்கு’ படத்தின் கதைச் சுருக்கம். அந்த சரக்கு என்ன, அதற்கும் குஜராத்துக்கும் என்ன தொடர்பு என்பதை விறுவிறுப்பாக மட்டும் இன்றி ரசிகர்களிடமும், தமிழ் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதேபோல், காதல், பாடல் என்று வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு வித்தியாசமான திரைக்கதை அமைப்போடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் ஜானர் திரைப்படமாக இருந்தாலும், வழக்கமான சினிமாவாக இல்லாமல் இருப்பதோடு, இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை சொல்லும் திரைப்படமாகவும் ‘ஃபாரின் சரக்கு’ இருக்கும்.” என்று நம்பிக்கையோடு கூறினார்.

’ஃபாரின் சரக்கு’ மூலம் தமிழ் சினிமாவில் கால்பதிக்க உள்ள இந்த மூன்று நண்பர்கள் தங்களைப் போல் சினிமா மீது ஆர்வம் உள்ள பலருக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என இப்படத்தின் சுமார் 300 பேர் அறிமுகமாகிறார்கள்.

கோபிநாத் மற்றும் சுந்தர் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், அப்ரினா, இலக்கியா, ஹரிணி ஆகிய மூன்று பெண்களும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

சிவநாத் ராஜன்.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்.பி.ஆர் இசையமைக்க, பிரகாஷ் ராஜ்.பி படத்தொகுப்பு செய்திருக்கிறார். டி.எம்.சரத்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

முழுக்க முழுக்க புதுமுக கலைஞர்களோடு உருவாகியிருக்கும் இப்படத்தில் ஒரே ஒரு தொழில்நுட்ப கலைஞர் மட்டும் பிரபலமானவர். அவர் தான் ஒலிக்கலவை கலைஞர் சிவகுமார். ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் பணியாற்றும் சிவகுமார் ‘சார்பட்டா’ போன்ற பல வெற்றி படங்களில் பணியாற்றி வருகிறார். அவர் தான் இப்படத்தின் ஒலிக்கலவை பணியை கவனித்துக்கொள்கிறார்.

குஜராத், நாமக்கல், மதுரை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் அனைத்து பணிகளும் நிரைவடைந்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Must Read

spot_img