ஒரு ஓட்டப்பந்தய வீரனின் கனவு கிளாப்
தனது தந்தை பிரகாஷ்ராஜுடன் பைக்கில் செல்லும் ஆதிக்கு விபத்து ஏற்படுகிறது. விபத்தில் தனது ஒரு காலை இழந்து விடுகிறார். இந்த விபத்தில் பிரகாஷ் ராஜ் இறந்து விடுகிறார். நல்லதொரு தடகள வீரரான ஆதி தனது காலை இழந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு தன்னால் தடகள வீரனாக ஆக முடியாமல் போனதே, கனவு வீணானதே என்று தினம் தினம் அதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு வருகிறார். காதலித்த பெண்ணான அகான்ஷா சிங்கை திருமணம் செய்து கொண்டாலும், சில வருடங்களாகவே அவருடன் பேசாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், விளையாட்டு கிளப்பின் தலைவராக இருந்து வரும் நாசர், கிராமத்தில் இருந்து வரும் கீழ் ஜாதியை சேர்ந்த மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை நிராகரிக்கிறார். நல்லதொரு திறமை இருந்தும் அவர் நிராகரிக்கப்படுகிறார்.
அந்த பெண்ணை சாதிக்க வைக்க வேண்டும், தன்னால் முடியாததை அந்த பெண் கொண்டு சாதிக்க வைக்க வேண்டும் என்று ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மிகப்பெரும் ஆளுமையான நாசரை எதிர்த்து, கிரிஷாவிற்கு பயிற்சியாளராக இறங்குகிறார் ஆதி.
நாசரை எதிர்த்து ஆதியால் வெற்றி பெற முடிந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
தன் இளமையில் எதையும் சாதிக்க முடியவில்லையே, இயலவில்லையே என்ற உணர்வில் மனதளவில் புண்பட்டு கஷ்டப்படும் காட்சிகளில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கிறார். மனம் படும் இன்னல்கள் முகம் வெளிக்காட்டும் தருணத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் ஆதி.
நாயகியாக அகான்ஷா சிங் அழகான தேவதையாக வருகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் அகான்ஷா ஸ்கோர் செய்திருக்கிறார். கைதட்டலையும் பெறுகிறார்.
படத்தின் கதை ஓட்டத்திற்கும், படத்தில் தடகள ஓட்டத்திற்கும் பெரிதும் கை கொடுத்திருப்பவர் கிரிஷா குருப். .
நாசர் வில்லனாக தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.