நூறு இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’யின் பின்னணியிசை
‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’க்காக ஹங்கேரி நாட்டில் நூறு இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய பின்னணியிசை
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியிருக்கிறார்.
ஒரு கிரைம் திரில்லர் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு, பின்னணியிசை ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தொடரில் இடம்பெறும் திருப்பங்களுக்கும், எதிர்பாராத சுவாரசியமான திடீர் திருப்பங்களுக்கும் உற்சாகப்படுத்தும் வகையில் பின்னணியிசை அமைந்திருக்கிறது. ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் இசையமைப்பாளரான சைமன் கிங், இந்த தொடரைப் பார்வையாளர்களிடத்தில் பிரத்யேகமாக அடையாளப்படுத்தும் வகையில் முகப்பு பாடலை அமைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.
தொடரின் துவக்கத்தில் இடம்பெறும் இந்தப் பாடல், நாற்பது பாடகர்களால் பாடப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் கிங், இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து நூறு இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார். ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உத்வேகம் பெற்ற உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து இதனை உருவாக்கியிருக்கிறார்.
.
இது தொடர்பாக இசையமைப்பாளர் சைமன் கிங் மேலும் பேசுகையில், ” வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பின்னணியிசையை ஹங்கேரி நாட்டில் உள்ள பாரம்பரியமிக்க புடாபெஸ்ட்டில் ஒன்றிணைக்க தீர்மானித்தோம். நாங்கள் பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடல்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக முற்பட்டபோது, முதலில் பாடகர் குழுவை கண்டறிவது சவாலாக இருந்தது. நிறைய குரல்கள் தேவைப்பட்டன. அவர்களால் துல்லியமாக உச்சரிக்கவும், இனிமையாக பாடவும் வேண்டும். நமது பாடலாசிரியர் கு. கார்த்திக் பழங்கால தமிழ் இலக்கிய உரையை பயன்படுத்தி மிக பழமையான தமிழ் பேச்சு வழக்கில் பாடல் வரிகளை எழுதினார். இது காலப்போக்கில் பின்னோக்கி செல்வதால், தற்போதைய தமிழர்கள் பலர் அடையாளம் காண மாட்டார்கள். எனவே வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிக்க வேண்டும் என்பதற்காக, சென்னையை சேர்ந்த இசைக் கலைஞர் அகஸ்டின் பால் அவர்களின் தலைமையில் குரல்களை கண்டறியும் பணியைத் தொடங்கினோம். அவர் 47 குரல்களை கண்டறிந்து பயிற்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து நாங்கள் பழைய தமிழ் பேச்சு வழக்குடன் மேற்கத்திய பாரம்பரிய பாடலுடன் குரல்களை பதிவு செய்தோம். பாடகர்களும், பாடகிகளும் பாடத் தொடங்கியவுடன், இயக்குநர் ஆண்ட்ரூசும், நானும் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதனை உணர்ந்தோம்.
இதைத்தொடர்ந்து இசைக்கருவிகளை இசைக்கும் இசை கலைஞர்கள் மற்றும் இசைக் குழுவை தேர்ந்தெடுப்பது சவாலாக இருந்தது. இந்த விசயம் தொடர்பாக நான் புடாபெஸ்ட்க்கு சென்றபோது, அங்கு ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த எனது நண்பரை சந்தித்தேன். அவருடைய உதவியால் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் இசைக்குழுவுடன் இணைந்து பாடலை பதிவு செய்ய தீர்மானித்தோம். இது ஒரு அற்புதமான மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. நாங்கள் அதை பதிவு செய்த அந்த அரங்கத்தில் என்னுடைய இசை உயிர்ப்புடன் உலா வந்ததை கண்டு மிகவும் நெகிழ்ந்தேன். இது எனக்கு ஒரு அதிசயமான தருணமாகவும் அமைந்திருந்தது.” என்றார்.
இதனிடையே இது ஒரு வலைதள தொடரின் துவக்க பாடல் மட்டுமல்ல. சைமன் கிங், வலைதள தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கான பிரத்யேக பின்னணி இசை குறிப்பையும், கதைக்களத்தில் நிகழும் முக்கிய தருணங்களுக்கான இசைக் குறிப்பையும் இங்கு உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர் மற்றும் காயத்ரியின் தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடர், பார்வையாளர்களை வெலோனியின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. கொலை குறித்த விசாரணை, வதந்திகளால் திசை மாறி செல்லும்போது உறுதிமிக்க காவல்துறை அதிகாரியான விவேக், உண்மையை கண்டறிவதில் இறுதிவரை துடிப்புடன் பணியாற்றுகிறார். இந்தத் தொடரில் எஸ் ஜே சூர்யாவுடன் சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர கலைஞர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.