spot_img
HomeNewsஉலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன்

உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன்

உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன்

கற்பனைத் திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூப்பர் ஹீரோ படைப்பான ‘ஹனு-மேன்’, எதிர்வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகி உலகளவில் வெளியாகிறது என படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ ஹனு- மேன்’. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டீசரில் இடம் பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் மற்றும் பின்னணி இசையின் மாயாஜாலத்தில், தேச எல்லைகளைக் கடந்து உலகளவில் மக்கள் வியப்படைந்திருக்கிறார்கள். பல அடி உயர பிரம்மாண்டமான அனுமான் சிலையின் தோற்றத்துடன் தொடங்கும் முதல் காட்சியிலிருந்து.. பனி படர்ந்த இமயமலையில் உள்ள குகைக்குள் நுழைந்து கேமராவின் கடைசி கோணம் வரை நீளும் அந்த டீசரில்.. ‘ராம்.. ராம்..’ எனும் கோஷம் ஒலிக்க.. தியானத்தில் அமர்ந்திருக்கும் ஹனுமேனின் காட்சி வரை… ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

உலகெங்கும் திரைத்துறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் விநியோஸ்தர்கள் ‘ஹனு-மேன்’ படத்தை தங்களது நாடுகளில் வெளியிட தயாரிப்பாளர்களுடன் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட் படங்களுடன் ஒப்பிடும்போது ஹனு-மேன் படத்தின் பட்ஜெட் சிறியது தான் என்றாலும், ஹாலிவுட் தரத்தில் அமைந்திருப்பதால் இதற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் இந்த ‘ஹனு-மேன்’ திரைப்படத்தை மே மாதம் 12ஆம் தேதி அன்று கோடைகால விடுமுறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், மாண்டரீன், ஜப்பானிய மொழியில் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்புக்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் உலக வரைபடத்தை காண்பித்து எந்தெந்த நாடுகளில் வெளியாகிறது என்பதை காவி வண்ணத்தில் குறிப்பிட்டு, அதன் பின்னணியில் ஆஞ்சநேயரின் ஸ்தோத்திரமும், இசையையும் இணைத்திருக்கிறார்கள். இறுதியில் ‘அனுமானின் பேரரசு’ என தனித்துவமான அடையாளத்தை காட்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த காணொளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஹனு-மேன் அடிப்படையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனை உலகில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் அனுமானின் சக்திகளை பெற்று அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் கதையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என தெரிய வருகிறது. இந்தப் படத்தின் கருத்துரு, உலகளாவியதாக இருப்பதால் உலகம் முழுவதும் இதற்கான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், கெட் அப் சீனு, சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌர ஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சௌரப் என மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கலை இயக்கத்தை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கவனிக்க, படத்தொகுப்பை எஸ். பி. ராஜு தலாரி கவனித்திருக்கிறார். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

பிரசாந்த் வர்மா – தேஜா சஜ்ஜா- கே. நிரஞ்சன் ரெட்டி ஆகியோர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஹனு-மேன்’, இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் உலகளாவிய மொழிகளிலும் வெளியாவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Must Read

spot_img