பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா
‘பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஒரு நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது
” பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது. அவரது இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கும். ” என கூறியிருக்கிறார்.
இதனிடையே நடிகை தமன்னா மட்டுமல்ல.. நடிகைகள் பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா கபூர், ஸ்ருதிஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பிரபாசின் மாயஜால விருந்தோம்பலில் நனைந்து, அவரைப் பற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதும், தற்போது அவர் ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ப்ராஜெக்ட் கே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், நடிகை தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.