தயாரிப்பாளர் கதிரேசன் முதல்முறையாக இயக்குனராக மாறியுள்ள படம் தான் இந்த ருத்ரன். அவர் இதற்கு முன் தான் தயாரித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு கமர்சியல் பாணியில் இந்த ருத்ரன் படத்தை இயக்கியுள்ளார்.ஒரு நடுத்தர வாழ்க்கை குடும்பத்தை சேர்ந்த அழகான வாழ்க்கைக்கு சொந்தக்காரர் ராகவா லாரன்ஸ். தந்தை நாசர், அவரது நண்பரின் துரோகத்தால் திடீரென மரணத்தை தழுவிய நிலையில் கடன்களை அடைப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் லாரன்ஸுக்கு ஏற்படுகிறது. குறைந்த நாட்களில் காதல் திருமணம் செய்த மனைவி பிரியா பவனி சங்கரை, அம்மா பூர்ணிமாவுடன் விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறார் லாரன்ஸ்.இந்த நிலையில் திடீரென அவரது அம்மா இறந்து விட்டதாக தகவல் வர ஊர் திரும்புகிறார் லாரன்ஸ். ஆனால் அவருக்கு முன்னதாக ஊருக்கு வந்த கர்ப்பவதி மனைவி பிரியா பவானி சங்கர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி ஆகிறார். அம்மாவின் காரியங்களை முடித்துவிட்டு நண்பன் காளி வெங்கட்டுடன் இணைந்து மனைவியை தேடும் முயற்சியில் இறங்கும் லாரன்ஸுக்கு தாயின் மரணம், மனைவி காணாமல் போனது ஆகியவற்றின் பின்னணியில் சரத்குமார் என்கிற கொலைகாரனின் மாபியா கும்பல் செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.யார் இந்த சரத்குமார் ? லாரன்ஸின் அம்மாவின் மரணத்திற்கும் மனைவி மாயமானதற்கும் எந்த வகையில் இவர் காரணமாக ஆனார் ? இதை லாரன்ஸ் எப்படி கண்டுபிடித்தார் ? பிரியா பவானி சங்கரின் நிலை என்ன ஆனது ? சரத்குமாரை லாரன்ஸ் எப்படி எதிர்கொண்டார் என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.படம் ஆரம்பிக்கும்போதே அதிரடி சண்டைக்காட்சியுடன் ஆரம்பித்தாலும் அடுத்து வரும் பிளாஸ்பேக் காட்சிகள் ஒரு குடும்ப படம் பார்ப்பது போன்ற உணர்வை தருகின்றன. அதன்பிறகு மீண்டும் ஆக்ஷனில் இறங்கும் படம் இறுதிவரை விறுவிறுப்பாக செல்கிறது.ருத்ரன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ருத்ர தாண்டவமே ஆடி இருக்கிறார் என்று சொல்லலாம். குடும்பத்தினருடன் கலாட்டா பண்ணும் ராகவா லாரன்ஸ், தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி நிகழ்வுக்குப் பிறகு அதிரடியாக மாறுவது எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் புதிய பாணியில் அதிர வைக்கிறார் லாரன்ஸ்.நாயகியாக பிரியா பவானி சங்கருக்கு அழுத்தமான நடிப்பை கொடுக்கும் வாய்ப்பு இதில் கிடைத்துள்ளது. அவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சரத்குமார். அவரது மிரட்டலான நடிப்பும் கொடூர வில்லத்தனமும் இறுதிக்காட்சியில் அவரும் லாரன்ஸும் மோதும் சண்டைக்காட்சியும் பிரமிப்பூட்டுகின்றன.நண்பனாக காளி வெங்கட், உதவி செய்யும் கதாபாத்திரம் போலீஸ் அதிகாரியான இளவரசு, சாந்த சொரூபியாக வில்லத்தனம் காட்டியுள்ள சரத் லோகித்ஸ்வா, அம்மா பூர்ணிமா ஜெயராம், அப்பா நாசர் என பலரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.பாடல்களுக்கான இசையில் ஜிவி பிரகாஷும் பின்னணி இசையில் சாம்.சி எஸ்ஸும் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து இருக்கின்றனர்.ரசிகர்களுக்கு லாரன்ஸ் படம் இப்படி இருந்தால் தான் பிடிக்கும் என பல்ஸ் பார்த்து இந்த படத்தை இயக்கியுள்ளார் தயாரிப்பாளர் கதிரேசன். அந்த வகையில் இவர் முதல் பட இயக்குனர் போலவே எந்த இடத்திலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனராக முதல் படத்தில் வெற்றிக்கொடி கட்டியுள்ளார்.