spot_img
HomeNews”பூர்ணா என் தாய் போன்றவள்

”பூர்ணா என் தாய் போன்றவள்

என் இசைக்கு 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம்” – டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின்

”இசையில் நூறு மதிப்பெண்கள் எப்பொழுதும் எடுப்பவர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் தான் “ – மிஷ்கின்

”பூர்ணா என் தாய் போன்றவள்” – மிஷ்கின்

”பூர்ணா ஒரு நடிப்புப் பேய்” – ‘டெவில்’ பட இயக்குநர் ஆதித்யா

”அண்ணனிடம் இருந்து எதுவும் கற்கவில்லை; குருநாதரிடம் இருந்து எல்லாம் கற்றுக் கொண்டேன்” – டெவில் பட இயக்குநர் ஆதித்யா

“கலைஞர்கள் எப்பொழுதுமே இந்த சமூகத்தை மேம்படுத்துவார்கள்” – டெவில் பட இயக்குநர் ஆதித்யா

”வெற்றியும் ஒன்றுமில்லை; தோல்வியும் ஒன்றுமில்லை” – ”டெவில்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின்

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஹெச் பிக்சர்ஸ் ஹரி பேசும்போது,
”மிஷ்கின் என்னுடைய குருநாதர் போன்றவர். நான் சினிமாவில் பார்த்து வியக்கும் ஆளுமைகளில் அவர் ஒருவர். அவருக்கு முதல் நன்றிகள். இந்த படத்தின் சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் ஆதித்யா படத்தின் பட்ஜெட்டை எவ்வளவு கம்மி பண்ண முடியுமோ அந்த அளவிற்கு குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை வெற்றிகரமாக செய்து கொடுத்திருக்கிறார். மற்றொரு தயாரிப்பாளரான டச் ஸ்கிரீன் ஞானசேகருக்கு நன்றி.

தயாரிப்பாளர டச் ஸ்கிரீன் ஞானசேகர் பேசும் போது,
”மிஷ்கின் சாரிடம் இருந்து தொழிலை நேசிக்க கற்றுக் கொண்டேன்… அவர் அவரைப் போல் பிறரையும் நேசிப்பவர், 16 வருடம் அவருடன் பயணித்தேன். ராதாகிருஷ்ணன் சார் என்னுடைய பலம். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் ஹரி சார் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆதித்யா சார் என் உயிரின் பாதி. எனக்கு யானை பலம் குடுத்தவர், ஸ்ரீகாந்த் சார் எனக்கு குருநாதர் போன்றவர் அவருக்கும் நன்றி. படத்திற்காக நல் உழைப்பை நல்கிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. “ என்று பேசினார்.

ஸ்ரீகாந்த் அவர்கள் பேசும் போது,
”இயக்குநர் மிஷ்கின் எனக்கு முப்பது வருட நண்பர், ரோட்டில் போகும் போது கைகளில் எப்போதும் ஏதோவொரு இசைக்கருவியை வைத்துக் கொண்டு இசைகளை உருவாக்கியபடியே தான் வருவார். அவர் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியம் இல்லை. இயக்கத்தில் தமிழ் சினிமாவில் புது பரிமாணங்களை உருவாக்கியது போல் இசையிலும் அவர் சாதிப்பார். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. இசையை முறையாகக் கற்றுக் கொண்டு, அதை தினமும் கடுமையாக பயிற்சி செய்து வருபவர், அதை பல முறை நானே பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்..” ”என்று பேசினார்.

நடிகர் ஆதித் அருண் பேசும் போது,
ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் இருக்கும் என்பது போல், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நம் பெயர் எழுதி இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஒரு படத்தின் பூஜைக்கு வந்திருந்த மிஷ்கின் சார் என் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது நீ என்ன செய்கிறாயோ அதை முழுமனதுடன் செய். அது உன்னைக் காப்பாற்றும் என்று சொல்லிவிட்டு சென்றார். அது முடிந்து இரு நாட்களில் என்னை படத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள். பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். முகமூடி படத்தின் படப்பிடிப்பில் மிஷ்கின் சார் கிரிக்கெட் விளையாடும் போது, அவருடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஆதித்யாவை எனக்கு ஒரு உதவி இயக்குநராக மட்டுமே தெரியும். அப்பொழுது ஏற்பட்ட நட்பு என்னை இன்று இந்த மேடையில் நிறுத்தியிருக்கிறது. தாயின் அன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரம், இரு மனிதர்களின் உறவு நிலைக்குள் இருக்கும் சிக்கலை இப்படம் பேசியிருக்கிறது. மைனாவில் இருந்து விதார்த் அவர்களை கவனித்து வருகிறேன்… இனிது இனிது படத்தின் டப்பிங் வொர்க் போகும் போது, மைனா படத்தின் கலரிங் வேலைகள் அதே ஸ்டூடியோவில் நடந்து கொண்டு இருந்தது. அப்பொழுது எங்கள் இயக்குநர் விதார்த் அவர்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார். பூர்ணா ஒருநாள் வாந்தி எடுத்துவிட்டு தலைவலி என்று போய் படுத்துவிட்டார். அப்பொழுது அவர் மீது கோபப்பட்டேன். பின்னர் தான் அவர் கருவுற்று இருக்கிறார் என்று தெரிந்தது. அவரை பைக்கில் பின்னால் அமர்த்தி போகும் காட்சியில் பயமும் பொறுப்பும் அதிகமாக இருந்தது. இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த மிஷ்கின் சார், ஆதித்யா சார் மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை பூர்ணா பேசும் போது.
”நீங்கள் அளித்து வரும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. டெவில் எனக்கு ஒரு படம் மட்டும் இல்லை. அது எனக்கு வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்வுபூர்வமான விசயமாக மாறி இருக்கிறது. என்ன தான் படித்து முடித்தாலும் நம் கல்லூரி முதல்வரைப் பார்த்தால் பயமாக இருக்கும் அல்லவா…? எனக்கு அப்படித்தான் இப்பொழுது இருக்கிறது. மிஷ்கின் என் பிரின்ஸிபால். என்னை ஒரு தாயாக சவரக்கத்தி படத்தில் காட்டியது மிஷ்கின் மற்றும் ஆதித்யா சார் தான். இன்று நான் உண்மையாகவே ஒரு குழந்தைக்கு தாயாகும் போதும் இவர்களின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. மிஷ்கின் மற்றும் ஆதித்யா இருவரிடமும் அடிக்கடி சொல்வேன் உங்கள் படங்களில் சிறிய கேரக்டர் இருந்தாலும் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று. அதை இப்பொழுதும் கூறிக் கொள்கிறேன்.. விதார்த் உடன் நான் ஏற்கனவே நடித்திருக்கிறேன்… அருண் உடன் நடிக்கும் போது தான் எனக்கு என் வயிற்றில் குழந்தை வளர்ந்து வருவது தெரிய வந்தது. ஆரம்பக்கட்டத்தில் இருந்து மிஷ்கின் அவர்களின் இசை நாட்டம் மற்றும் இசை புலமை குறித்து எனக்குத் தெரியும், பின்னணி இசை மட்டுமின்றி, பாடல்களின் இசை, அதன் வரிகளில் இருக்க வேண்டிய நுட்பம் என, அவரின் படங்களில் வரும் இசை தொடர்பான எல்லா விசயங்களிலும் முடிவுகளை அவர்தான் எடுப்பார். ஏனென்றால் அவருக்கு நல்ல இசையறிவு உண்டு. டெவில் படத்தில் வரும் பாடல்களுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம். என் கணவரை குஷிப்படுத்த நான் அந்தப் பாடல்களை பாடவிட்டு ஆடத் துவங்கிவிடுவேன்.. அவர் இசையிலும் பெரிதாக சாதிப்பார் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

நடிகர் விதார்த் பேசும் போது,
”மிஷ்கின் சாருக்கு பெரிய நன்றி. சித்திரம் பேசுதடி படத்தின் வெற்றிக்குப் பின்னர் நான் கூத்துப் பட்டறையில் இருந்து கால் செய்து வாழ்த்து தெரிவித்தேன்… அப்பொழுது இருந்து எப்பொழுதும் அவர் என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். இருக்கிறார். அது இன்று வரை மாறாமல் தொடர்கிறது. அவருடன் அல்லது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீகாந்த் சார் மற்றும் மிஷ்கின் சாருக்கு நன்றி. என்னை மிக அழகாக திரையில் காட்டிய ஒளிப்பதிவாளர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி. ஜன்னலோரம் படத்தில் ஏற்கனவே பூர்ணாவுடன் நடித்திருக்கிறேன். எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருப்பார். திறமையான நடிகை. ஜன்னலோரம் படத்தில் அவருக்காக ஏங்கிக் கொண்டு இருப்பேன். சேர முடியாமல் போய்விடும் இப்படத்தில் எங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹரி சாருக்கு நன்றி. இப்படி ஒரு அழகான படத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு. ராதாகிருஷ்ணன் சாருக்கும் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி கூற விரும்புகிறேன்.

மிஷ்கின் சார் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர் இசையமைத்த முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பின்னணி இசையமைக்கும் போது அதைப் பார்ப்பதற்கும் என்னை அனுமதித்தார். அதற்கும் நன்றி. என் நடிப்பு இப்படத்தில் பேசப்பட்டால் அதற்கு முழு காரணம் இயக்குநர் ஆதித்யா அவர்கள் தான். நெருக்கமான பாடல் காட்சிகளில் அவர் சொல்லிக் கொடுத்ததில் பாதி கூட நானும் அந்த நடிகையும் நடிக்கவில்லை என்பது தான் உண்மை. அவருக்குள் மிக அற்புதமான நடிகன் இருக்கிறான். டெவில் திரைப்படம் ஒரு நல்ல திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என்றார்.

படத்தின் இயக்குநர் ஆதித்யா பேசும் போது,
வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள், மாதா பிதா குரு தெய்வம், என்பார்கள். படத்தின் மீதான ஆர்வத்தையும் துடிப்பையும், அதன் மீது இருக்க வேண்டிய நேர்மையையும் என் குருநாதர் மிஷ்கின் சாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. அவருக்கு அடுத்ததாக இன்று வரை என்னை சவரக்கத்தி படத்தின் இயக்குநராக அறிய வைத்தது பத்திரிக்கை நண்பர்களின் எழுத்துதான். அவர்களுக்கு நன்றி.

Thanuramn என்கின்ற புத்தகத்தை Land Markல் அண்ணன் வாங்கிக் கொடுத்தார்., அதைப் படிக்கும் போது, அதில் ஒரு அற்புதமான கரு இருப்பது புலப்பட்டது. அதை வைத்துக் கொண்டு மாத்திரம் ஒரு கதை செய்துவிட முடியாது, அதை மீறி அக்கதையில் ஒரு விசயம் தேவை என்று தேடிக் கொண்டு இருக்கும் பொழுதுதான், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி-யின் ”ஒளிக்குப் பிறகு இரவுக்கு அப்பால்” புத்தகத்தினை படித்தேன். கலைஞர்கள் எப்போதுமே சமூகத்தை மேம்படுத்தி சிந்திக்க வைப்பார்கள். அந்த சிந்தனை அக்கதையில் இருந்தது. அதை வைத்து ஒரு கதையினை உருவாக்கத் துவங்கினேன். அப்பொழுது ஊரடங்கு என்பதால் படித்துக் கொண்டே இருந்து அக்கதையை தயார் செய்தேன். ஞானசேகர் சார் போன் செய்து ஏதாவது கதை இருக்கிறதா.. படம் பண்ணலாமா என்று கேட்டார். இந்தக் கதையை கூறி டைட்டில் டெவில் என்று சொன்னதும் அட்டகாசம் சார்… படம் ஹிட் என்று ஊக்கம் தந்தார்.

மிஷ்கின் சாரிடம் இருந்து கற்று கொண்டது, ஒரு சினிமா பார்வையாளனிடம் என்ன செய்யும் என்பதைக் தான்.. கேளடி கண்மணி, படத்தில் அந்த தலையனையில் இருக்கும் காற்று வெளியேறும் போதும், நந்தலாலா மனப்பிறழ்வு அடைந்த ஒருவன் குழந்தையின் தாயை அறையும் போதும்,, பூவே பூச்சுடவா படத்தில் அந்த காலிங்பெல்லை அந்தப் பாட்டி, பேத்தியின் இறப்புக்குப் பின் மீண்டும் மாட்டும் போதும் நெஞ்சில் தைக்கும் உணர்வு இருக்கும்.

இப்படி திரைப்படம் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் என் குருநாதரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்… என் அண்ணனிடம் நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, என் குருநாதரிடன் எல்லாம் கற்றுக் கொண்டேன். எம்.கே.மணி அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க என் திரைக்கதைக்கு உதவி செய்தார். கிருஷ்ணா, பாலா உதவி இயக்குநர்கள் உடன் இருந்தார்கள்.
பூர்ணா அவர்கள் என்னுடைய எல்லா படங்களில் இருக்கிறார். அவர்களுக்கு நன்றி. பூர்ணா ஒரு நடிப்புப் பேய்.. ஸ்கார்ஸி படங்களில் எப்படி டி நீரோ இருக்கிறாரோ அது போல், என் படங்களில் எப்போதும் அவர் இருப்பார். நீதி தவறப்படும் போது வாழ்க்கை சிக்கலாகும் என்பதை விதார்த்தின் கதாபாத்திரம் பேசும். ஷார்மிங் ஹீரோ அருணுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசும் போது,
இப்படத்தினை வழங்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் சார், என்னிடம் முதன் முதலில் கேட்டார். பின்னர் ஸ்ரீகாந்த் அவர்களின் வற்புறுத்தலால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்… சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். நான் உதவி இயக்குநாக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.

ஆதித்யா, பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்தப் பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குநாக சேர்த்துக் கொண்டேன்.. இந்த வாழ்க்கையில் வெற்றி என்பது ஒன்றுமே இல்லை, அது போல் தான் தோல்வியும் ஒன்றுமே இல்லை. இந்த வாழ்க்கையில் நீங்கள் பெரிதாய் எதும் செய்துவிட முடியாது. சாமான்ய மனிதன் தன் குடும்ப உறவினர்களுக்காக உழைக்கிறான்… இன்னும் வெகு சில மனிதர்கள் இந்த உலக மக்களுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் வெகு சிலரே… அது எல்லாராலும் முடியாது.

ஒரு படத்தை நீங்கள் உண்மையாக எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள், சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான் திரைப்படத்திற்கான உயிர். நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் landscape இருக்கும்.

அருண் மிகவும் ஸ்மார்ட் ஆன பையன்.. நிறைய படிப்பான்…. படித்துவிட்டு என்னுடன் அதிகமாக விவாதிப்பான்…

சினிமாவில் முப்பது வருட நட்பு இருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான்… ஏதோவொரு குணநலத்தால் நிகழ்வால் அந்த நட்பு எங்காவது உடைந்துவிடும், ஆனால் ஸ்ரீகாந்த் உடன் முப்பது ஆண்டிற்கும் மேலாக நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது… நான் ஓடிக் கொண்டிருந்தால் வந்து ஷூ கொடுப்பார்… இரவு முழுவதும் படிக்கும் போது, என் அறை மூலையில் எனக்காக டீ போட்டுக் கொண்டு இருப்பார்… என் மகளை தன் குழந்தைப் போல் பார்த்துக் கொள்கிறார். இந்த வாழ்க்கையில் நான் சம்பாதித்தது ஸ்ரீகாந்த் நட்பை தான்.. நான் சாகும் போது அவன் என்னுடன் இருப்பான்… நட்பு மிக முக்கியம். இன்று எதுகுறித்துப் பேசுவது என்று தெரியவில்லை. அதனால் தான் நான் நட்பைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தேன்.

Living truthfully in an imaginary situation என்பது நடிப்பு பற்றி கொடுக்கப்படும் விளக்கம். நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர் நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா… பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்… பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்…. அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள்.

என் தம்பி மிக எளிமையானவன், வாழ்க்கையின் கஷ்டங்களை இப்பொழுது புரிந்து கொள்ள துவங்கியிருக்கிறான்…. அவன் மொழியில் வளமை இல்லை என்றாலும் உணர்வு இருக்கிறது… வெற்றிமாறனுக்குப் பிறகு நாவலில் இருந்து கதையை எடுத்திருக்கிறான்… அந்த ஸ்கிரிப்டில் என்னை தலையிடக்கூடாது என்று சொல்லிட்டான்.. இன்றுவரை அந்த ஸ்கிரிப்டை எனக்கு படிக்க கொடுக்கவில்லை. கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்… வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்பதற்கான கேள்விகளின் பதில் இருப்பதால் இப்படம் நல்ல படம் என்பேன்… சில முயற்சிகள் எடுத்திருக்கிறான்… மிகச்சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.

ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் ஏற்படும் குழப்பநிலை இது காதலா.. இல்லை காமமா என்கின்ற குழப்பத்தை பதிவு செய்திருக்கிறான்…
இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்…

பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் டெவில் திரைப்படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள். நன்றாக இல்லை என்றால் ஆதரவு கொடுக்க வேண்டாம். தம்பி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்… நன்றாக இல்லை என்றால், ஓடாது… பரவாயில்லை. தொடர்ச்சியாக நீ ஓடு… தோல்வி என்பது ஒன்றுமே இல்லை. நீ தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இரு.. இந்த நிகழ்விற்கு வந்த அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

Must Read

spot_img