spot_img
HomeNewsஅங்க அடிச்சா இங்க வலிக்கும் ; பொன்னியின் செல்வன் படத்தால் சம்பந்தமே இல்லாத நபர்களுக்கு ஏற்பட்ட...

அங்க அடிச்சா இங்க வலிக்கும் ; பொன்னியின் செல்வன் படத்தால் சம்பந்தமே இல்லாத நபர்களுக்கு ஏற்பட்ட நட்டம்

கடந்த 50 வருடங்களுக்கு முன்பே அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ஒன்று. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த நாவலை படமாக்க முயற்சித்து கைவிட்டார் அதன்பிறகு கமல் பின்னர் மணிரத்னம் ஆகியோரும் இந்த நாவலை படமாக்க முயற்சித்து பட்ஜெட் காரணமாக கைவிட்டனர்.

ஆனாலும் கடந்த சில வருடங்களாக பெரிய பட்ஜெட் படங்களை எடுக்க தடை இல்லை என்கிற சூழ்நிலை உருவானதும் இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட்டார். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் இரண்டாம் பாகத்திற்கு அந்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

குறிப்பாக நாவலில் இருந்த பல விஷயங்களை இயக்குனர் மணிரத்னம் தனது இஷ்டத்திற்கு மாற்றி விட்டார் என்பதுதான் பொன்னியின் செல்வன் நாவலை ரசித்த ரசிகர்களின் கோபம். அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் அந்த படம் கொடுத்த தோல்வி சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் எதிரொலித்துள்ளது.

பொதுவாகவே புத்தகக் கண்காட்சியை பொறுத்தவரை அங்கே உள்ள ஆயிரம் கடைகளில் கிட்டத்தட்ட 500 கடைகளில் பொன்னியின் செல்வன் நாவல் தான் பிரதான இடம் பிடித்திருக்கும். வருடம்தோறும் அந்த நாவல் தான் அதிக அளவில் விற்பனையும் ஆகும். பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகிறது என்ற தகவல் வெளியானதுமே அதிக அளவில் பொன்னியின் செல்வன் நாவல்கள் விற்பனையாகின.

முதல் பாகம் வெளியானபோது கூட சஸ்பென்ஸ் தாங்காதவர்கள் இரண்டாம் பாகத்தில் என்ன நடக்கும் என்பதற்காக பொன்னியின் செல்வன் நாவலை வாங்கி படித்தனர். ஆனால் இரண்டாம் பாகம் கொடுத்த ஏமாற்றம் ஒரு பக்கம், படத்தை தான் பார்த்து விட்டோமே இனி எதற்கு கதையை படிக்க வேண்டும் என பலரும் நினைத்தது இன்னொரு பக்கம் என இந்த வருடம் பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது.

வழக்கம் போல அதிக அளவில் இந்த புத்தகத்தை விற்பனைக்காக கொண்டு வந்த அனைவருக்கும் மிகப்பெரிய நட்டத்தை கொடுத்து ஏமாற்றத்தையும் அளித்துள்ளது பொன்னியின் செல்வன் நாவல். அனேகமாக அடுத்த வருடம் 10 கடைகளிலாவது இந்த புத்தகம் இருந்தால் ஆச்சரியம்தான் என்று வாசகர்கள் பலரும் சொல்கிறார்கள்.

Must Read

spot_img