
இயக்குனர் வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்து ரிலீஸ் செய்யும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் வெற்றிமாறன். அவரது படங்களில் எப்படியாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்பது அனைவருக்குமே விருப்பமாக இருக்கும். அது அவர் இயக்கும் படமாக இருந்தாலும் சரி அல்லது அவர் தயாரிக்கும் படமாக இருந்தாலும் சரி.
அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவாகும் படங்களும் கூட காக்கா முட்டை போல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது அவர் தயாரிக்கும் புதிய படத்தில் ராமராஜன் பட கதாநாயகி ஒருவர் நடிக்கிறார் அவர் யார் என்று சொல்வதற்கு முன்பு அவர் போட்ட கண்டிஷன் பற்றி சொல்லி விடுவோம்.
வழக்கமாக சீனியர் கதாநாயகிகளை இப்போது இருக்கும் இயக்குனர்கள் தங்கள் படங்களில் அம்மா, அக்கா, அண்ணி என்றுதான் கதாபாத்திரங்களை கொடுத்து நடிக்க வைப்பார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் என்றால் தயவு செய்து என்னை தேடி வர வேண்டாம் என்று கறாராக கூறிவிட்டாராம் அந்த ராமராஜன் நாயகி.
ஆனால் இந்த படத்தின் கதையின் நாயகியே நீங்கள் தான் என்று படத்தின் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி சொன்னதும் வாசல் கதவை அகலமாக திறந்து வைத்து வாயெல்லாம் புன்னகையுடன் வரவேற்றுள்ளார் அந்த நடிகை.
இதற்கு மேல் சஸ்பென்ஸ் வேண்டாம் அவர்தான் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக இயக்குனர் கங்கை அமரனால் அறிமுகப்படுத்தப்பட்ட நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகை பானுப்பிரியாவின் சகோதரி.
இவரும் அக்காவை போல 90களில் பிஸியான நடிகையாக நடித்தவர் தான். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் தற்போது மீண்டும் வெற்றிமாறன் படம் மூலமாக இன்னொரு வெற்றி பயணத்தை துவங்க இருக்கிறார்.
