கடந்த 30 வருடங்களாக.. இல்லையில்லை ஒரு பத்து வருடத்தை கழித்து விடுங்கள்.. 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்தது வெறும் நான்கைந்து படங்கள் தான் என்றாலும் இதுநாள் வரை அவர் நடித்த காமெடி படங்கள் தான் இன்னும் அவரை ரசிகர்கள் மத்தியில் நினைவு மறக்காமல் உலாவ விட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக மாமன்னன் என்கிற படத்தில் வடிவேலு இதுவரை நடித்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அதற்கும் பலத்த கைதட்டலையும் பாராட்டுகளையும் பெற்றார்.
அந்த படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் வடிவேலுக்குமான காம்பினேஷன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் மாரீசன் என்கிற படத்தில் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்த படத்தின் கதையானது நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை ஒன்றாக பயணிக்கும் ஒரு வயதான நபரும் ஒரு இளைஞனும் சந்திக்கும் அனுபவங்களை மையப்படுத்தி உருவாக இருக்கிறதாம். இது பலருக்கும் புதிய கதையாக தெரிந்தாலும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பகத் பாசில் நடித்த நார்த் 24 காதம் என்கிற படத்தின் ரீமேக் ஆகத்தான் உருவாக இருக்கிறதாம்.
மாமன்னன் படத்தில் நடித்தபோது பகத் பாசில் வடிவேலுவுடன் சகஜமாக உரையாடும்போது இந்த படம் குறித்து பேசி உள்ளார். இந்த படத்திலும் ஒரு வயதானவருக்கும் இளைஞனாக நடித்த பகத் பாசிலுக்கும் ஒரு பயணத்தில் ஏற்படும் நட்பும் அது குறித்து அனுபவங்களும் தான் கதையாக சொல்லப்பட்டிருந்தது. இதைக் கேட்டதுமே வடிவேலு உற்சாகமாகி இந்த படத்தை ரீமேக் செய்தால் நடிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்தாராம்/ அதைத் தொடர்ந்து இந்த மாரீசன் படம் அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.