விரைவில் இந்தியா முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு வருடம் கழித்து தான் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தான் நடிகர் விஜயகாந்த் மரணமும் சில நாட்கள் கழித்து நடிகர் விஜய்யின் புது கட்சி துவக்கமும் என இரண்டு நிகழ்வுகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு அவரது கட்சி என்ன ஆகும், அவரது தொண்டர்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழக மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என்று விஜய்யும் அரசியல் கட்சி துவங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் அஜித்திடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசும்போது அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என எல்லோருமே அரசியலுக்கு வந்து விட்டால் ஓட்டு போடுவதற்கு மக்கள் வேண்டாமா ? நான் ஓட்டு போடுவதோடு என் அரசியலை நிறுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ விஜய் கட்சி ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் வெளியாகி இருப்பதால் யாரோ திட்டமிட்டே விஜய்யை கிண்டலடிக்கும் விதமாக இதை பரப்பி உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.