கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட்டை சேர்ந்த ஒரு நடிகர் நடித்திருந்தாலும் அதில் அவரது கையாளாக தீவிரவாதிகளில் ஒருவராக நடித்திருந்தவர் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ.
விஜய் அந்த மாலில் ஒருவரை கை, கால்களை கட்டி ஆமையை தூக்கி வருவது போல தூக்கி வருவாரே, அவர்தான் இந்த சைன் டாம் சாக்கோ. அந்த படம் வெளியான பிறகு தன்னை அந்த படத்தில் சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து விட்டார்கள் என்று பரபரப்பாக குற்றம் சாட்டினார்.
அது மட்டுமல்ல விஜய்யின் நடிப்பு பற்றியும் குறிப்பாக 60 70 கிலோ எடை கொண்ட ஒரு மனிதனை கை கால்களை கட்டி தூக்கி வரும்போது எந்த அளவிற்கு முகத்தில் அந்த வெயிட்டை தூக்குவது போன்ற உணர்ச்சிகளை காட்ட வேண்டும் என்றும் அதை விஜய் சரியாக காட்டவில்லை என்பது போன்ற கிண்டல்களையும் வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் இவரது பேச்சு பரபரப்பு ஏற்படுத்தி பின் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிப்பதற்கு இணைந்துள்ளார் சைன் டாம் சாக்கோ. ஏற்கனவே தெலுங்கில் தசரா படத்தில் வில்லனாக நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் இவர்.
விஜய் அப்படி நடித்ததற்கே அந்த வாரு வாரினார். பாலகிருஷ்ணாவின் ரயிலை பிடித்து நிறுத்துவது ஹெலிகாப்டரை தூக்கி எறிவது போன்ற காட்சிகளை பார்த்துவிட்டு இனி அவரை என்ன சொல்லப் போகிறாரோ ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்