கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்திற்கே பேரதிர்ச்சி தரும் விதமாக புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார். அந்த சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக மிக நீண்ட விடுமுறை காலம் என்பதால் பல சினிமா பிரபலங்கள் தமிழ்நாட்டில் இல்லாமல் வெளிநாட்டுக்கு தங்களது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் சென்றனர்.
விஜயகாந்த் மரணம் நிகழ்ந்த போது பலரும் வெளிநாட்டில் இருந்ததால் அவரது இறுதிச் சடங்கில் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை. அதே சமயம் பலரும் தாங்கள் வர முடியாத வருத்தத்தை தெரிவித்து விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர். ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நேரிலேயே வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் முன்னணி நடிகராக மிகவும் நேர்மையானவர் என்று அவரது ரசிகர்களால் சொல்லப்படும் நடிகர் அஜித் அந்த சமயத்தில் துபாயில் இருந்தாலும் விஜயகாந்தின் மறைவுக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை. சென்னை திரும்பிய பிறகு விஜயகாந்தின் நினைவிடத்திற்கோ அல்லது அவரது வீட்டிற்கோ சென்று துக்கம் விசாரிக்கவில்லை. அஞ்சலியும் செலுத்தவில்லை.
இது தமிழக மக்கள் மட்டுமல்லாது அஜித் ரசிகர்கள் பலரிடமும் வெறுப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் அஜித்தின் நண்பரும் சினிமா இயக்குனரும் பிரபல அரசியல்வாதியான சைதை துரைசாமியின் மகனுமான வெற்றி துரைசாமி சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் பலியானார். அவரது உடல் பல நாட்கள் தேடப்பட்டு நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவரும் அஜித்தும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது பலமுறை வெளிப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த அஜித் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துபாயிலிருந்து இதற்காகவே கிளம்பி வந்துள்ளார் அஜித். மேலும் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு சைதை துரைசாமியின் வீட்டிற்கு சென்று தூக்கம் விசாரித்துள்ளார்.
அஜித்தை பொருத்தவரை வெற்றி துரைசாமியுடனான பழக்கம் என்பது சில வருடங்கள் தான் இருந்திருக்கும். ஆனால் அஜித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே சினிமாவில் ஜாம்பவானாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அஜித் திரையுலகில் வந்த பிறகு சில நடிகைகளுடன் தேவையில்லாத சங்கடங்களில் சிக்கி அதுமட்டுமல்லாமல் சில படங்களில் கால்சீட் சொதப்பல் செய்த சமயத்தில் எல்லாம் ஒரு நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்தின் உதவி அவருக்கு பலமுறை கிடைத்துள்ளது.
உதவி கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ, சக நடிகராக ஒரு நடிகர் சங்க தலைவராக இருந்த அவரது மரணத்திற்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செய்யாவிட்டாலும் ஒரு இரங்கல் அறிக்கை கூடவா அவரால் கொடுக்க முடியவில்லை. சென்னை வந்த பிறகு விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்க விடாமல் அவரை தடுப்பது எது என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் போட்டு வறுத்து எடுத்து வருகின்றனர்.