இயக்குனர் கவுதம் மேனன் டைரக்சனில் சூர்யா நடிப்பதாக துருவ நட்சத்திரம் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன பிறகும் கூட அந்த படம் படப்பிடிப்பை நோக்கி நகரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சூர்யா இதுவரை இந்த படத்தின் கதை பற்றி என்னிடம் கவுதம் மேனன் கூறவே இல்லை, அதனால் இந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று ஒதுங்கிக் கொண்டார்.
அதன்பிறகு சில வருடங்கள் கிடப்பில் கிடந்த அந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று முன் வந்தார் நடிகர் விக்ரம். சில பல தாமதங்களுக்கு பிறகு ஒரு வழியாக துருவ நட்சத்திரம் படத்தை இயக்கிய முடித்து விட்டார் கவுதம் மேனன். ஆனால் படம் முடிந்து வருடக்கணக்காகியும் இன்னும் ரிலீசாக முடியாமல் தவித்து வருகிறது அந்த படம்.
குறிப்பாக கவுதம் மேனன் தயாரிப்பாளராக இருந்து சில படங்களை தயாரித்த வகையில், அவை பெரிய அளவில் அவருக்கு நட்டத்தை தேடி கொடுத்தன. அதனால் கவுதம் மேனன் இயக்கும் படங்கள் என்றாலும் கூட அவை ரிலீஸ் ஆகும்போது சிக்கலை சந்திப்பதை வாடிக்கையாகவே கொண்டுள்ளன.
அதனால் தான் துருவ நட்சத்திரம் படமும் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆக முடியாமல் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் தமிழில் படங்களை ஹிந்தியில் வாங்கி விநியோகம் செய்யும் ஒரு பிரபல விநியோகஸ்தர் இந்த படத்தை வெளியிடுவதற்கு முன் வந்திருக்கிறார்.
அவருக்கு இரண்டு படங்களை தான் இயக்கி தருவதாக ஒப்பந்தம் செய்துள்ள கவுதம் மேனன் அதன் மூலம் 20 கோடி ரூபாயை அட்வான்ஸாக பெற்றுள்ளாராம். மேலும் துருவ நட்சத்திரம் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் மூலமாகவும் 40 கோடி ரூபாயை பெற்று தருவதாக அந்த விநியோகஸ்தர் கூறியுள்ளாராம்.
இதன் மூலம் கிடைக்கும் அறுபது கோடி ரூபாயை வைத்து துருவ நட்சத்திரம் படத்தின் பிரச்சினைகளை முடித்து இந்த பிப்ரவரி மாதத்திற்குள் ஆகவே அந்த படத்தை ரிலீஸ் செய்ய முழுமூச்சில் இறங்கியுள்ளாராம் கவுதம் மேனன்.