விஜய் தனது ரசிகர் மன்றத்தை சில வருடங்களுக்கு முன்பே விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அவர்கள் மூலமாக மக்களுக்கு சேவைகள் கிடைக்கும் விதமாக அவர்களை பணியாற்ற வைத்து வருகிறார். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்றாலே ஓரளவுக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இந்த மக்கள் இயக்கத்தை கட்டிக் காக்கும் பொறுப்பை அதன் செயலாளர் ஆன புஸ்சி ஆனந்த் தான் கவனித்து வருகிறார். அதுமட்டுமல்ல விஜய்யின் சினிமா நிகழ்வுகளை தாண்டி அவரது அரசியல் நகர்வுகளிலும் புஸ்சி ஆனந்தின் ஆலோசனைகள் பெரிய அளவில் இருக்கின்றன என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற கார் விபத்தில் பலியானார். அவரது உடல் பல நாட்கள் தேடப்பட்டு நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக வெற்றி துரைசாமியின் நண்பராக அறியப்படும் அஜித்தும் நேரில் வந்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். தற்போது அரசியல்வாதியாக மாறிவிட்ட விஜய் தானும் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு நேரிலேயே சென்று இறுதி அஞ்சலி செலுத்த விரும்பினார்.
ஆனால் ஏற்கனவே விஜயகாந்த்திற்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்டத்தில் அவரை நோக்கி வீசப்பட்ட செருப்பு வீச்சு இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு நீங்கள் வெற்றி துரைசாமியின் இறுதி நிகழ்வுக்கு சென்றால் இது போன்று ஏதேனும் சங்கடங்கள் நிகழலாம் எனக் கூறி தடுத்து விட்டாராம் புஸ்சி ஆனந்த். அதனால் தான் விஜ ய் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு நாள் நேரில் சென்று வெற்றி துரைசாமியின் ஆறுதல் சொல்ல இருக்கிறாராம் விஜய்.