தமிழ் சினிமாவில் சந்தானம், சூரி இருவரும் காமெடி நடிகர்கள் என்கிற நிலையில் இருந்து மாறி தற்போது ஹீரோவாகவும் கதையின் நாயகனாகவும் பிசியாக நடித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் நகைச்சுவை ஏரியாவில் இருந்து கிளம்பியதால், ஆளில்லாத அந்த ஏரியாவில் தனி ஒரு ஆளாக ராஜாங்கம் செய்து வருகிறார் நடிகர் யோகிபாபு.
அவரும் கூட அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகன் என்கிற பெயரில் ஹீரோவாக நடித்து வருகிறார். என்றாலும் முழுநேர ஹீரோவாக சென்றால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தன்னை கைவிட்டு விடுவார்கள் என்பதால் பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டு தன்னைத் தேடி வரும் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சைரன் திரைப்படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகிபாபு.
இந்த நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டபோது நடிகர் ஜெயம் ரவி பேசுகையில் தனக்கு இயக்குனராகும் ஆசை உண்டு என்றும், தான் இயக்க உள்ள முதல் படத்தில் நடிகர் யோகிபாபுவை தான் ஹீரோவாக நடிக்க வைக்க போகிறேன் என்றும் அதற்கான கதையை தயார் செய்து விட்டேன் என்றும் கூறினார்.
மேலும் அந்த நிகழ்ச்சியிலேயே தன்னிடம் இருந்த கொஞ்சம் பணத்தை எடுத்து யோகிபாபுவிடம் இதுதான் என்னுடைய படத்திற்கான உங்களுக்கான அட்வான்ஸ் என்று கூறி அங்கேயே யோகிபாபுவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து கொண்டார் ஜெயம் ரவி.