விஜய்சேதுபதி, திரிஷா இருவரும் இணைந்து நடித்த, ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்த அருமையான காதல் காவியமான 96 என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரேம்குமார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படம் குடும்பக்கதை அம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார் என சொல்லப்பட்டது.
அது உண்மைதான் என்றாலும் அவர் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். அதற்கு பதிலாக அவருக்கு தங்கையாக நடித்து வருகிறாராம். ஏற்கனவே காஷ்மோரா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் கூட அதில் சொல்லிக்கொள்ளும்படியாக அவரது கதாபாத்திரம் அமையவில்லை.
அதே சமயம் இந்த படத்தில் தங்கை கதாபாத்திரம் என்றாலும் கதாநாயகியை விட இவரது கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறி சந்தோஷப்பட்டு வருகிறாராம் ஸ்ரீதிவ்யா.