திரையுலக பிரபலங்களின் வாரிசுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அவர்களது திருமணம் தான். பிரபலங்களின் மகளாக பிறந்தவர்கள் சினிமாவில் நடிகையாக, இயக்குனராக மாறிவிட்டால் பெரிய பிரச்சனை இல்லை. அதே சமயம் வேறு யாரோ ஒருவரை காதலித்தாலோ, திருமணம் செய்து கொள்ள நினைத்தாலோ அதற்கு அந்தஸ்து குறுக்கே வந்து நிற்கும்.
அதையும் தாண்டி எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்வோரும் உண்டு. பெற்றோரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொள்வோரும் உண்டு. அல்லது பெற்றோரே தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி பார்க்கும் மணமகனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிறவர்களும் உண்டு. ஆனால் இவர்கள் வாழ்க்கை எல்லாமே இனிமையாக செல்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு பாண்டிச்சேரி கிரிக்கெட் டீம் சேர்ந்த ரோஹித் என்கிற இளைஞரை திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் திருமணம் ஆன ஆறு மாதங்களிலேயே அந்த ரோஹித் தன்னிடம் பயிற்சி பெற்ற பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக சொல்லி போக்சோ சட்டத்தில் அவர் மீது வழக்கு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அவருடன் ஷங்கரின் மகள் வாழ விரும்பாததால் கொஞ்ச காலம் தனியே பிரிந்து வாழ்ந்து தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் தருண் கார்த்திகேயன் என்பவருக்கு தனது மகளை மறுமணம் செய்து கொடுக்க இருக்கிறார் ஷங்கர்.
இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவும் இதே போன்று தனது பெற்றோர்கள் செய்து வைத்த திருமணம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.