நடிகர்களிலேயே அஜித் ரொம்பவே வித்தியாசமானவர். ரசிகர் மன்றத்தை விரும்பாதவர். தனது சுயலாபத்திற்காக ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளாதவர். புகழை விரும்பாதவர் என்று ஒரு பக்கம் சிலர் அவரது குணங்களை பாராட்டுகிறார்கள். ஆனால் திரையுலகிலோ அவர் தான் நடிக்கும் படங்களின் புரோமோசனுக்கே வரமாட்டேன் என்கிறார், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அவருடன் பழகிய அல்லது அவர் மரியாதை செலுத்த வேண்டிய பிரபலங்களின் மறைவுக்கு அல்லது பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு நேரில் செல்ல மறுக்கிறார் என குமுறுகிறார்கள்.
இப்படி சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. அந்த சமயத்தில் நேரில் வர முடியாதவர்கள் கூட இரங்கல் அறிக்கை தெரிவித்தனர். சிலர் வெளியூரிலிருந்து வந்த பிறகு நேரில் அவரது சமாதிக்கும் அவரது வீட்டிற்கும் சென்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
ஆனால் அஜித் இதில் எந்த ஒன்றையும் செய்யவில்லை. இது விஜயகாந்த் ரசிகர்களை மட்டுமல்ல, விஜயகாந்த்தை நேசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், ஏன் அஜித் ரசிகர்கள் உட்பட பலருக்குமே வருத்தத்தையும் அதன் பிறகு கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இப்போது வரை அஜித்தை பலரும் வசைபாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இன்னும் சில மாதங்களில் அதாவது மே மாதத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித்திற்கு இப்படி எதிர்மறையாக கிடைத்துள்ள விமர்சனங்களால் படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ன தயாரிப்பு நிறுவனம் அச்சமடைந்துள்ளது.
இந்த நிலையில் அஜித்திற்கு தற்போது எந்த அளவிற்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை பல்ஸ் பார்ப்பதற்காக அவர் ஏற்கனவே நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பில்லா படத்தை வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ரீ ரீலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு வழக்கம் போல ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்தால் அஜித்திற்கான மரியாதை இன்னும் அப்படியே இருக்கிறது அதில் எந்த சரிவும் இல்லை என தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகவே முன்னோட்டம் பார்க்கும் விதமாக இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.