ஆலமரத்தின் கீழ் விதைக்கப்படும் விதைகள் அல்லது செடிகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளராமல் அப்படியே நின்று விடும் என்று சொல்வார்கள். காரணம் எப்போதுமே நிழலில் இருப்பதால் அந்த செடிக்கும் விதைக்கும் போதுமான வெளிச்சம் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்பட்டு நின்று விடும்.
அதேபோல சினிமாவைப் பொறுத்தவரை ஒருவரைப் போலவே இன்னொருவர் அதே சாயலில் நடிகராக களம் இறங்கினாலும் இதே ஆலமரத்தடி விதை போல தான் வளர்ச்சி அடையாமல் போய்விடுவார்கள். இதற்கு பல வருடங்களுக்கு முன்பு உதாரணம் என்றால் ரஜினிகாந்த் போலவே தோற்றம் கொண்டதாக சொல்லிக்கொண்டு நளினிகாந்த் என்பவர் வந்து வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனார்.
அதேபோல விஜயகாந்தின் உருவ சாயல் கொண்டு சினிமாவில் இறங்கிய பருத்திவீரன் சரவணனுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் சித்தி மகனும் கிட்டத்தட்ட அவரைப் போன்றே தோற்றம் கொண்டவருமான நடிகர் விக்ராந்துக்கும் இதே போன்ற நிலைமை தான் ஏற்பட்டது.
இப்போது வரை விக்ராந்துக்கு என தனிப்பட்டு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. அவருக்கு அப்படி எந்த ஒரு பெரிய வெற்றியும் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு சில படங்களில் மட்டும் அவரது நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இவருக்கு இந்த நிலை ஏற்பட காரணம் இவரது அண்ணன் விஜய் தான் என்றால் அதில் மிகையில்லை.
இன்னொரு பக்கம் விஜய்யின் தம்பி என்பதாலேயே இவரிடம் நிறைய பேர் கதை சொல்ல வந்துள்ளார்கள். ஆனால் பலரும் இந்த கதையில் விஜய்யை ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லுங்கள், விஜய்யை ஒரு பாடலுக்கு ஆட சொல்லுங்கள், விஜய்யை நம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொல்லுங்கள் என்பது போன்ற கோரிக்கைகளுடன் தான் படம் தயாரிக்க வந்தார்கள்.
ஆனால் விஜய் அண்ணாவிடம் சென்று எந்த உதவியும் கேட்க மாட்டேன் என விக்ராந்த் பிடிவாதமாக இருந்ததால் தனக்கு வந்த பல பட வாய்ப்புகளை இப்படி இழந்ததாக கூறியுள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தில் அவருக்கு மகனாக நடித்ததன் மூலம் மீண்டும் அவருக்கு ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இதுவாவது விக்ராந்திற்கு புதிய பாதை போட்டு தருகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.