முன்பெல்லாம் ஒரு படத்திற்கு இரண்டாம் பாகம் என்பது ஏதோ அத்தி பூத்தாற்போல இருந்தது. ஒரு சில படங்களில் இரண்டாம் பாகத்திற்கான தேவை இருப்பது போல முடிந்திருக்கும். அதை வைத்து அடுத்தடுத்த பாகங்களை எடுக்க சிலர் ஆர்வம் காட்டுவார்கள் அதன்பிறகு சில ஹீரோக்களும் சில இயக்குனர்களும் தங்களுக்கு தோல்வி ஏற்பட்ட சமயத்தில் எல்லாம் ஏற்கனவே தாங்கள் நடித்த, இயக்கிய ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தை அறிவித்து அதன் மூலம் பரபரப்பு ஏற்படுத்தி வெற்றியடைய முயற்சிப்பார்கள்.
இப்படி முயற்சித்தவர்களுக்கு எல்லாம் பெரிய அளவில் வெற்றி கை கூடவில்லை என்பது நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். உதாரணத்திற்கு சண்டக்கோழி 2, சாமி 2, பில்லா 2 என சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது உள்ள சூழலில் ஒரு படம் வெளியாவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறதா என்கிற கேள்வியை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தின் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். இப்படி அவருக்கு வரிசையாக படங்கள் இருக்கின்றன.
இன்னொரு பக்கம் தற்போது வெங்கட் பிரபு டைரக்சனில் நடித்து வரும் விஜய் சமீபத்தில் தான், அரசியலில் நுழைவதாக அறிவித்தவுடன் இன்னும் இரண்டு படங்களில் நடித்துவிட்டு ஒதுங்கி விடுவேன் என்றும் கூறியுள்ளார். வெங்கட் பிரபுவுக்கு அடுத்ததாக வேறு எந்த இயக்குனர் அவர் படத்தை இயக்கப் போகிறார் என ஆளுக்கு ஒருவர் பெயரை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜிடம் விஜய் வைத்து நீங்கள் லியோவின் இரண்டாம் பாகத்தை இயக்குவீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இரண்டாம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது. விஜய் சம்மதித்தால் நான் ரெடி தான்.. ஆனால் விஜய்யின் எதிர்கால திட்டங்கள் மிக உயரமாக இருக்கின்றன. அதனால் இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றாலும் லியோ படம் அவருக்கு ஒரு சறுக்கல் தான். அப்படி பெரிய அளவில் ஓடாத படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க அவரே விரும்ப மாட்டார் என்றாலும் விஜய் ரசிகர்கள் யாரும் வருத்தப்படக்கூடாது என இப்படி பட்டும் படாமல் ஒரு பதிலை கூறியிருப்பார் என தெரிகிறது.