ஒரு காலத்தில் தங்களது அபிமான நடிகர்களை எந்த விழாவிலாவது பார்த்தால் அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் முண்டியடித்தார்கள். அதன்பிறகு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினார்கள். இப்போது செல்பி யுகம் என்பதால் சம்பந்தப்பட்ட நடிகரின் அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ அனைவருமே அவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள முட்டி மோதுகிறார்கள்.
ஒரு விழாவில் கலந்து கொள்ளும் ஹீரோ தனது ரசிகர்கள் எல்லோருடனும் இப்படி புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. அப்படி சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியும் மதுரையில் தான் நடித்துள்ள சைரன் திரைப்படம் ஓடும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளார். படம் முடிந்ததும் அங்கிருந்து ரசிகர்களுடன் புகைப்படம் செல்பி எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார்.
அப்படி அவருடன் செல்பி எடுக்கும் முயற்சித்,து முடியாமல் போன ஒரு ரசிகர் கோபத்துடன் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன். ஆனால் உங்களுக்கு வேண்டியவர்களுடன் மட்டும் நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டீர்கள் என்று சோசியல் மீடியாவில் குற்றம் சாட்டியிருந்தார்.
பெரும்பாலும் இதுபோன்று ரசிகர்களின் கமெண்ட்களை எந்த ஹீரோவும் கண்டு கொள்வதில்லை. ஆனால் நடிகர் ஜெயம் ரவியோ இதில் சற்று வித்தியாசமாக, “மன்னித்து கொள்ளுங்கள் சகோதரரே.. கிட்டத்தட்ட 300 பேருடன் நான் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டேன்.. எப்படி உங்களை மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை.. நீங்கள் சென்னைக்கு வரும்போது கட்டாயம் என்னுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம்.. கோபம் வேண்டாம்.. வெறுப்பை விதைக்க வேண்டாம்.. அன்பை பரப்புங்கள்” என்று கனிவாக பதில் அளித்துள்ளார். இதை படித்த அனைவருமே ஜெயம் ரவியின் இந்த பண்பை பாராட்டி வருகின்றனர்.