தமிழ் சினிமாவில் தற்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் கூட ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கும் மோகம் அதிகரித்து வருகிறது. சுத்த தமிழில் டைட்டில் வைக்கும் மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் கூட தற்போது தக் லைஃப் என ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கும் அளவிற்கு மாறி விட்டார்கள். அந்த அளவிற்கு டைட்டில் பஞ்சமும் இருக்கிறது.
இன்னும் சில பேர் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் டைட்டிலை மீண்டும் வைக்க துவங்கி விட்டனர். அப்படி வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஏற்கனவே ஹிட்டான ரஜினி படங்களின் பாடல்கள், பஞ்ச் வசனங்கள் இவற்றையெல்லாம் டைட்டில் ஆக மாற்றினர்.
இன்னொரு பக்கம் கவுண்டமணி, வடிவேலு ஆகியோர்கள் பேசிய புகழ்பெற்ற வசனங்கள் வார்த்தைகளை தங்களது படங்களுக்கு டைட்டிலாக வைத்து வெளிச்சம் தேட பலர் முயற்சித்து வருகின்றனர். நடிகர் சந்தானம் கூட அவரது படங்களுக்கு டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி என கவுண்டமணி பேசி பிரபலமான வார்த்தைகளை தனது படத்திற்கு டைட்டிலாக வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகர் யோகிபாபு வடிவேலு பேசி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற கிணத்தை காணோம் என்கிற காமெடி காட்சி இடம்பெற்ற வார்த்தைகளை டைட்டிலாக கொண்ட படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். யோகிபாபுவை கூட இந்த பன்ச் டைட்டில் மோகம் விட்டு வைக்கவில்லை பார்த்தீர்களா ?