விஜய் டிவி சீரியல்களில் நடித்து பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் ஆரம்பத்தில் நடித்த சில படங்களை சரியாக போகவில்லை. எல்லா ஹீரோக்களுக்கும் ஏதாவது ஒரு நல்ல நேரம் வரும் என்பது போல கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியைப் பெற்று இவருக்கு திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் நடிகர் கவின். இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு 2 என இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை சுந்தர்.சி இயக்க இருக்கிறார் என்றும் இதில் கதாநாயகனாக நடிகர் கவின் நடிக்க இருக்கிறார் என்றும் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த நிலையில் சுந்தர்.சி தரப்பிலிருந்து இப்படி கவினை நடிக்க அழைப்பதற்காக எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சுந்தர்.சி தரப்பிலிருந்து இந்த படத்தில் நடிக்க கவினை அழைத்ததாகவும் ஆனால் சுந்தர்.சி படத்தில் நடித்து விட்டால் தனது இமேஜ் காமெடி கலந்து வேறு விதமாக மாறிவிடும் என்றும், தான் வித்தியாசமான சற்று சீரியசான கதை அம்சம் கொண்ட படங்களில் கவனம் செலுத்த போகிறேன் என்பதாலேயே இந்த படத்தை மறுத்துவிட்டார் என்றும் இன்னொரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.