நடிகை கஸ்தூரி 30 வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இடையில் கொஞ்ச காலம் காணாமல் போனவர், தற்போது கடந்த ஐந்து வருடங்களாக சில படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து கொண்டு சினிமா, அரசியல், ஆன்மீகம் என ஒவ்வொரு டாப்பிக்காக பிரித்து மேய்ந்து வருகிறார். குறிப்பாக அரசியல் கட்சிகள், அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் அரசியல் நிகழ்வு குறித்து ஒரு பேட்டியில் கஸ்தூரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய கஸ்தூரி, “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சொல்வார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி அறிவிப்பை வெளியிட்டவர், நிச்சயம் இந்த தேர்தலில் போட்டியிட்டால் தான் சரியாக இருந்திருக்கும். ஆனால் நான் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவேன் என அவர் கூறியதால், அதற்குள் மக்கள் அவரை அப்படியே மறந்து விடுவார்கள்” என்றார்.
அந்த சமயத்தில் ரஜினியின் அரசியல் என்று குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, “ரஜினிக்காக நான் குரல் கொடுத்து அவரது அரசியல் வருகையை வரவேற்று பேசி இருக்கிறேன். அவர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொல்லி பின்னர் கொரோனா காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கூறிய போது சரி என ஏற்று கொண்டேன்.
ஆனால் எந்த உடல் நிலையை காரணம் காட்டி மக்களை சந்திக்க முடியாது என்று அவர் சொன்னாரோ அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்று படங்களில் நடித்து முடித்து விட்டார். அதுதான் எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.