spot_img
HomeNewsடெக்னாலஜி குரல் திருட்டு ; லீகல் நோட்டீஸ் அனுப்பிய எஸ்பிபி சரண்

டெக்னாலஜி குரல் திருட்டு ; லீகல் நோட்டீஸ் அனுப்பிய எஸ்பிபி சரண்

சமீபகாலமாக ஏ-ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக மறைந்த கலைஞர்களை கூட திரையில் உயிருடன் இருப்பது போல நடிக்க வைக்கின்றனர். அவர்களது குரல்களையும் செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் அச்சு அசலாக அப்படியே உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட லால் சலாம் படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது போன்றவர்களின் குரலை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மீள் உருவாக்கம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இதே போன்று கடந்த வருடம் தெலுங்கில் வெளியான கீடா கோலா என்கிற படத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகரும் தனது தந்தையுமான எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலை தன்னுடைய அனுமதியின்றி இதேபோன்ற தொழில்நுட்பத்தில் மீள் உருவாக்கம் செய்து பயன்படுத்தியதற்காக படத்தின் இயக்குனர் தருண் பாஸ்கர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கியுள்ளார் பாடகர் எஸ்பிபி சரண். இதை தொடர்ந்து கீடா கோலா படக்குழுவினருக்கு இதுகுறித்து காப்பிரைட் சட்டத்தின் அடிப்படையில் லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி சரணின் வழக்கறிஞர் கவிதா தீனதயாளன் இதுபற்றி கூறும்போது, “தனது தந்தை எஸ்பிபியின் குரலை அவரது ரசிகர்கள் இதுபோன்று மீள் உருவாக்கம் செய்து பயன்படுத்துவதை எஸ்பிபி சரண் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அதேசமயம் அவரது குரலை பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதுவும் முறையான அனுமதி இன்றி பயன்படுத்தியதால் தான் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.ஆர் ரகுமான் சமீபத்தில் இப்படி லால் சலாம் படத்தில் மறைந்த பம்பா பாக்யா மற்றும் சாகுல் அமீது ஆகியோரின் குரல்களை ஏ-ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருந்தாலும் டைட்டில் கார்டில் அவர்கள் பெயரை இடம் பெறச் செய்ததுடன் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு ஊதியத்தையும் வழங்கியுள்ளார். கீடா கோலா படக்குழுவினர் ஒரு மரியாதைக்கு கூட எஸ்பி பாலசுப்ரமணியம் பெயரை படத்தின் டைட்டில் கார்டில் பயன்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

Must Read

spot_img