திரையுஉலகில் உள்ள பிரபலங்களின் வாரிசுகளில் கதாநாயகர்களாகத்தான் பெருமளவில் அறிமுகமாகின்றனர். கதாநாயகிகளாக அறிமுகமாகும் வாரிசுகளின் எண்ணிக்கை என பார்த்தால் குறைவு தான். அந்த வகையில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி உள்ளிட்ட வெகு சிலர்தான் சினிமாவில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
அதே சமயம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே பட்டத்து யானை என்கிற படத்தில் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்தார். ஆனாலும் ரசிகர்களிடம் அவர் வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து அவரது தந்தையான நடிகர் அர்ஜுன் ஒரு இயக்குனராக மாறி தனது மகளை கதாநாயகியாக வைத்து சொல்லி விடவா என்கிற படத்தை இயக்கினார். அந்த படமும் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் இளம் நடிகரான விஸ்வக் சென் என்பவரை கதாநாயகனாக வைத்து தனது மகளை கதாநாயகியாக நடிக்க வைத்து புதிய படம் ஒன்றை இயக்க பூஜை எல்லாம் போட்டார். ஆனால் படத்தின் நாயகனுக்கும் அர்ஜுனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் சூட்டிங் துவங்குவதற்கு முன்பாகவே நின்று விட்டது.
அப்போது அந்த நடிகர் குறித்து அர்ஜுன் காரசாரமாக பேட்டி அளித்தார். சினிமாவில் தொழில் பக்தி குறைவான நடிகர் என அவரை விமர்சித்தார். இந்த நிலையில் அந்த படத்தில் இருந்து தான் விலகியது குறித்து காரணத்தை கூறியுள்ளார் நடிகர் விஸ்வக் சென்.
அந்த படம் துவங்குவதற்கு முன்னதாக அர்ஜுனிடம் சில விஷயங்களை நாம் பேசி தெளிவுபடுத்திக் கொண்டு ஒரு நாள் கழித்து படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று தான் நான் கூறினேன். ஆனால் அதற்காக என் மீது கோபப்பட்டு என் வீட்டிற்கு வந்து என் தாய் தந்தையர் முன்னாடியே என்னை கடுமையாக பேசினார்.
அதன் பிறகு அவரிடம் நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இருமடங்காக அவரிடம் திருப்பித் தந்து விட்டேன். நான் சாதாரண நிலையில் இருந்து வந்தவன் என்பதால் எனக்கு சினிமாவில் எந்த பின்னணியும் இல்லை. இதுவே திரையுலக பின்னணி கொண்ட ஒரு நடிகராக இருந்திருந்தால் அர்ஜுன் இப்படி நடந்திருப்பாரா ? நிச்சயம் மாட்டார்” என்று கூறியுள்ளார்.