spot_img
HomeNewsகிளாஸ்மேட்ஸ் - விமர்சனம்

கிளாஸ்மேட்ஸ் – விமர்சனம்

தயாரிப்பு : முகவை ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்

நடிகர்கள் : அங்கயற்கண்ணன், ஷரவண சக்தி, மயில்சாமி, அபி நட்சத்திரா பிரானா, அருள்தாஸ், டி. எம். கார்த்திக், சாம்ஸ் மற்றும் பலர்.

இயக்கம் : ஷரவண சக்தி

‘குடி குடியை கெடுக்கும்’ என்ற முதுமொழி அனைவருக்கும் தெரியும். ஆனால் குடிகாரர்களால் குடும்பம்- குடும்ப உறுப்பினர்கள்- எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்? என்பதை விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கதையின் நாயகனான அறிமுக நடிகர் அங்கயற்கண்ணன் வாடகைக்கு வாகனத்தை ஒட்டும் ஓட்டுநர். இவருடைய மது அருந்தும் நண்பராக அதாவது கிளாஸ்மேட்ஸ் இவரது உறவினர் ஷரவணசக்தி. இருவரும் காலையிலேயே மது அருந்தும் பழக்கமுடையவர்கள்.

இவர்களுக்கு அவர்களது மனைவியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து கண்டிக்காததால்.. நாளாந்தம் குடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எந்த புள்ளியில் திருந்தினார்கள் (!) என்பதுதான் படத்தின் கதை.

இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் மதுவிற்கு அடிமையாகி இருப்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் குடும்பத்திற்குள்… கணவன்- மனைவி உறவுக்குள்.. தாம்பத்ய உறவுக்குள் ஏற்படும் தர்ம சங்கடங்களையும், குளறுபடிகளையும் மேலோட்டமாக விவரித்திருக்கிறார்கள்.

மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து குடிகாரர்களை மீட்கும் வைத்தியர் ஒருவரை நாயகனும் அவரது நண்பரும் சேர்ந்து குடிக்கு அடிமையாக்குவதும், குடி பழக்கத்திலிருந்து மீண்டு பொறுப்புடன் குடும்பத்தை கவனிக்கும் மயில்சாமி கதாபாத்திரத்தை மீண்டும் குடிக்க வைப்பதும் திரைக்கதைக்கு சுவராசியம் தருகிறது. அப்போதே இவர்கள் எப்போது திருந்துவார்கள்? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. இவர்கள் திருந்தும் உச்சகட்ட காட்சி… 90 கிட்ஸ்.. 2கே கிட்ஸ்.. என அனைவருக்கும் பிடிக்கும்.

பெண் கதாபாத்திரம் அதிலும் நன்றாக படித்து அரசாங்கத்தில் உயர் பதவியில் அமர வேண்டும் என விரும்பும் கதாபாத்திரம் ‘கெட்ட ‘வார்த்தையை ( அந்த வார்த்தை மௌனிக்கப்பட்டிருந்தாலும்) பயன்படுத்தி இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

வன்முறை வேண்டாம் என வலியுறுத்துவதற்கு 14 ரீல்களில் 13 ரீல்களில் வன்முறையை பேசிவிட்டு, 14வது ரீலில் வன்முறையை தவிருங்கள் என சொல்வதைப் போல்.. குடிக்க வேண்டாம் என சொல்வதற்கு படம் முழுவதும் கிட்டத்தட்ட உச்ச காட்சி வரை நாயகனும் அவரது நண்பரும் குடித்து கும்மாளம் அடிப்பது படத்தை பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

தயாரிப்பாளரும், கதாநாயகனுமான அங்கயற்கண்ணனின் தோற்றம்.. அசல் தமிழ் மண்ணிற்கான தோற்றமாக இருப்பதால்.. பல காட்சிகளுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது. அவரும் தனக்கு என்ன வரும் என்பதை தெரிந்து நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

காட்சிகளில் தேவையற்ற கவர்ச்சி திணிக்கப்பட்டிருப்பது வணிக சமரசம் என்றாலும்.. போரடிக்கிறது. இயக்குநர் சரவணசக்தி தனக்கான காட்சிகளை அதிகப்படுத்தி இருப்பது புத்திசாலித்தனம் என்றாலும், அவை ரசிக்கும் வகையில் இருப்பதால் மன்னிக்கலாம்.

குறிப்பாக அவரது மனைவியாக நடித்திருக்கும் கதாபாத்திரம் இவரிடம் ‘பிட்டு படம் பார்த்தால் மட்டும் போதாது..’ என பேசும்போது இவரின் ரியாக்ஷன் சிரிப்பை வரவழைக்கிறது.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல்கள், பின்னணி இசை, கலை இயக்கம் அனைத்தும் ஒரு திரைப்படத்திற்கான குறைந்தபட்ச தரத்தில் அமைந்திருக்கிறது.

Must Read

spot_img