தயாரிப்பு : லேகா தியேட்டர்ஸ்
நடிகர்கள் : பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா, யுவ லட்சுமி, ரோஹித், ரெடின் கிங்ஸ்லீ, மதுமிதா, மனோபாலா மற்றும் பலர்.
இயக்கம் : ஆதி ராஜன்
பாடசாலையில் பயிலும் போதே கௌதம் ( ரோஹித் + பிரஜின்) மற்றும் மலர்விழி ( யுவலட்சுமி+ சினாமிகா) காதலிக்கிறார்கள். கௌதம் தனது காதலை மலர்விழியிடம் கடிதம் மூலம் சொல்கிறார். மலர்விழி சூழ்நிலை காரணமாக காதலருக்கு தனது எண்ணத்தை கடிதத்துடன் அவருக்கு விருப்பமான இசைக்கருவியுடன் இணைத்து அளிக்கிறார்.
ஆனால் கௌதமிற்கு மலர்விழி வழங்கிய இசைக்கருவி மட்டும் பரிசாக கிடைக்கிறது. காதலுக்கான பதில் கிடைக்கவில்லை. அவள் தன்னை காதலிக்கிறார் என நினைத்துக் கொள்கிறார் கௌதம். கௌதமின் நண்பர்களும், வகுப்பு தோழர்களும் வெளிநாட்டிற்கு சென்ற மலர்விழி.. அங்கு யாரையாவது திருமணம் செய்து கொண்டு, கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார். அதனால் நீயும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி, அவரது அன்பிற்காக ஏங்கும் உறவினர் பெண்ணிற்கு ( மணிஷா யாதவ்) திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் மலர்விழியை மறக்க இயலாமல் கௌதம் தவிக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து மலர்விழி கௌதமை திருமணம் செய்து கொள்வதற்காக சென்னைக்கு வருகிறார். மலர்விழியின் காதல் வென்றதா? திருமணமான கௌதம் தன் காதலியை ஏற்றுக் கொண்டாரா? என்பதுதான் இப்படத்தின் கதை.
திரைத்துறையில் இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக வலம் வரும் பிரஜின் இதில் காதலுக்காக ஏங்கும் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் திரையில் காதலனுக்குரிய விவரிக்க இயலாத மகிழ்ச்சியும், இளமையான ஆர்வமும் அவருடைய முகத்தில் மிஸ்ஸிங்.
இருப்பினும் இரண்டாம் பாதியில் மலர்விழியாக வரும் கதாபாத்திரம் சொல்லும் உண்மை.. ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது. காதலை இப்படியும் சொல்லலாம் என புதிய அணுகுமுறையை கையாண்டிருக்கும் இயக்குநரை பாராட்டலாம்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருப்பதால் ரசிக்க முடிகிறது. ரெடின் கிங்ஸ்லீ சில இடங்களில் ஒன் லைன் பஞ்ச் மூலம் சிரிக்க வைக்கிறார். மதுமிதா முதன்முறையாக முழு நீள குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களை கவருகிறார். இசைஞானியின் பாடல்கள் வழக்கம் போல் மனதை இதமாக வருடுகிறது.