பொதுவாகவே இயக்குனர்கள் பாலா, வெற்றிமாறன், அமீர், ராம் போன்றவர்கள் இயக்கும் படங்கள் எல்லாம் நீண்ட காலம் தயாரிப்பில் இருப்பது போலவும் நீண்ட காலம் படப்பிடிப்பு நடப்பது போலவும் அனைவருக்குமே தோன்றும். தங்கள் படைப்பு மிக நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் படத்தை பார்த்து பார்த்து செதுக்குகிறார்கள் என்று இதற்கு காரணம் சொல்லப்படுவதுண்டு.
சில நேரங்களில் அது உண்மை என்றாலும் பல நேரங்களில் வேறு சில விஷயங்களும் படத்தை தாமதப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி, சூரி நடிப்பில் உருவாகி வரும் ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் படத்தின் வேலைகள் முடிவடைந்து சமீபகாலமாக சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பில் தாமதத்தை ஏற்படுத்திய ஒரு வித்தியாசமான விஷயம் பற்றி சமீபத்தில் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர்தான் தாமதத்திற்கு பெயர் போன சிம்புவை வைத்து மாநாடு என்கிற வெற்றி படத்தை கொடுத்தவர்.
இந்த ஏழு கடல் ஏழுமலை படத்தில் ஒரு எலியை சிஜி முறையில் உருவாக்கி இருக்கிறார்கள். பொதுவாக விலங்குகளை நடிக்க வைக்கும்போது விலங்குகள் நல வாரியத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். இந்த இடத்தில் தான் பெரும்பாலான படங்களுக்கு இந்த சான்றிதழ் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன.
அந்தவகையில் ஏழு கடல் ஏழு மலை படத்திற்கும் இதுபோன்ற தடையில்லா சான்றிதழ் பெற ஒரு வருட காலம் இழுத்தடித்தார்களாம். இத்தனைக்கும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள எலி, சிஜி முறையில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் கூட இந்த படத்திற்கான தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு ஒரு வருடம் ஆனது என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.