மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவர் குரலுக்கு மயங்காதோர் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி அவர் பாடிய பாடல்களில் நிறைய சிறப்பம்சங்களும் இருக்கின்றன.
அந்த வகையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ‘கேளடி கண்மணி’ என்கிற படத்தில் இளையராஜா இசையில் அவர் மண்ணில் இந்த காதலன்றி என்கிற பாடலை பாடியிருந்தார். அந்தப் பாடலில் வரும் பல்லவியை அவர் மூச்சு விடாமல் பாடியிருந்தது தான் அந்த படத்தில் ஹைலைட்டாக பேசப்பட்டது. அதன் பிறகு பல நிகழ்ச்சிகளிலும் கூட அந்த பாடலை மேடையில் மூச்சு விடாமல் பாடி அசத்தினார் எஸ்.பி பாலசுப்ரமணியம்.
இந்த நிலையில் இந்தப்பாடல் ஒரிஜினலாக ரெக்கார்ட் செய்யப்பட்டபோது எஸ்பிபி மூச்சு விடாமல் எல்லாம் பாடவில்லை.. இடையில் இரண்டு இடங்களில் நிறுத்தி பாடியதை நாங்கள் ஒட்டு வேலை செய்து மூச்சுவிடாமல் பாடியது போல மாற்றினோம் என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும் இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்.
அவர் இப்படி கூறியுள்ளது எஸ்பிபி ரசிகர்களிடையே வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி மூச்சு விடாமல் அவரால் பாட முடியவில்லை என்றால் பொது மேடைகளில் பாடும்போது மட்டும் எப்படி மூச்சு விடாமல் பாடினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் அப்படியே ஒட்டு வேலை செய்திருந்தாலும் கூட, அந்த தகவலை இப்போது ஏன் இவர் சொல்ல வேண்டும் என்றும் அவரை குற்றம் சாட்டுகின்றனர்.